/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஆர்.எப்., ஊழியர்கள் 9வது நாளாக போராட்டம்
/
எம்.ஆர்.எப்., ஊழியர்கள் 9வது நாளாக போராட்டம்
ADDED : செப் 21, 2025 01:49 AM

திருவொற்றியூர் :திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகரில், எம்.ஆர்.எப்., டயர் தயாரிப்பு தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு, 820 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டில் ஊழியர்கள், நிர்வாகத்துடன் இணக்கமான சூழலை கடைபிடிக்கவில்லை எனக்கூறி, மருத்துவ காப்பீட்டிற்கான முன்பணத் தொகையை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, 10ம் தேதி இரவு முதல், ஊழியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், 'நிறுவன வாயில் முன் கூடக் கூடாது. போராட்டம் நடத்தக்கூடாது என, 2007ல், முந்தைய ஊழியர்கள் போராட்டத்தின்போது, பெறப்பட்ட தடை ஆணையை சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தொழிற்சாலை சார்பில், நேற்று முன்தினம் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து ஊழியர்கள் வாயிற்கதவு முன் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, இரும்பு தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆனாலும், ஒன்பது நாளாக ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, எம்.ஆர்.எப்., டயர் தொழிலாளர்கள் சங்க வெளி உபதலைவர் சிவபிரகாசம் கூறியதாவது:
ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு, 1.15 கோடி ரூபாய் தொழிற்சாலை முன்பணமாக தரும். பின், ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளும். அதை தர மறுத்ததால் தான் தற்போதைய பிரச்னைக்கு காரணம். நீண்ட கால பிரச்னையாக, 61 பயிற்சியாளர்களை நிரந்தரப்படுத்தாமல், தினம், 16 மணி நேரம் வேலை வாங்குகின்றனர்.
தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தை அமல்படுத்தபடுத்த வேண்டும் என்கின்றனர். இதன் மூலம், எதிர்காலத்தில் நிரந்தர பணியாளர்கள் இருக்க மாட்டார்கள். இது குறித்து தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளோம். முதலில் மருத்துவ காப்பீட்டிற்கான முன்பணத் தொகை, தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.