/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி துவக்கம்
/
முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி துவக்கம்
ADDED : ஜூலை 09, 2025 11:45 PM
சென்னை, அகில இந்திய அளவில் முருகப்பா ஹாக்கி தொடர், சென்னையில் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் ஹாக்கி யுனிட் ஆப் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா ஹாக்கி அணிகள் மோதுகின்றன.
எம்.சி.சி., முருகப்பா குரூப்ஸ் சார்பில், அகில இந்திய அளவில் '96வது முருகப்பா தங்கக் கோப்பை' ஹாக்கி தொடர் சென்னை, ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் இன்று துவங்கி வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.
தமிழகம், மஹாராஷ்டிரா உட்பட அகில இந்திய அளவில் சிறந்த ஒன்பது அணிகள், முதல் முறையாக ஒரு வெளிநாட்டு அணி என 10 அணிகள் இரு பிரிவாக பங்கேற்கின்றன.
இதன் 'ஏ' பிரிவில், நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வே, இந்தியன் ஆர்மி, என்.சி.ஓ.இ., போபால், ஹாக்கி மஹாராஷ்டிரா அணிகளோடு தமிழக அணி இடம் பெற்றுள்ளது.
'பி' பிரிவில் இந்தியன் ஆயில், மலேஷியா ஜூனியர் நேஷனல், இந்தியன் நேவி, ஹாக்கி கர்நாடகா, சென்ட்ரல் போர்ட் ஆப் டைரக்ட் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. போட்டி, லீக் கம் நாக் - அவுட் முறையில் நடக்கிறது.
அதாவது, இரு பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளும், தங்கள் பிரிவில் இடம் பிடித்த மற்ற அணியோடு, தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடம் பிடித்த அணிகள், அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெறும். முதல் போட்டியில், ஹாக்கி யூனிட் ஆப் தமிழக அணி, ஹாக்கி மஹாராஷ்டிரா அணியுடன் மோதுகிறது.
இந்த தொடரில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை மற்றும் ஏழு லட்சம் ரூபாய், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.