/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முருகப்பா கோப்பை ஹாக்கி; ஒடிசா அணி த்ரில் வெற்றி
/
முருகப்பா கோப்பை ஹாக்கி; ஒடிசா அணி த்ரில் வெற்றி
ADDED : செப் 23, 2024 05:57 AM

சென்னை, : சென்னையில் இயங்கி வரும் முருகப்பா குழுமம் சார்பில், தேசிய அளவிலான ஹாக்கி போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 'எம்.சி.சி., முருகப்பா தங்க கோப்பை'க்கான 95வது தொடர், எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடக்கிறது.
கடந்த 19ம் தேதி துவங்கிய இப்போட்டியில், 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 'ஏ, பி' என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவம், பி.பி.சி.எல்., மஹாராஷ்டிரா மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
'பி' பிரிவில் கர்நாடகா, ஐ.ஓ.சி.எல்., என்.சி.ஓ.இ., சென்ட்ரல் செக்ரட்ரியேட், ஒடிசா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டியில் சந்திக்கும். இதில், நேற்று மாலை 2:30 மணிக்கு நடந்த போட்டியில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள என்.சி.ஓ.இ., அணியும் ஒடிசா அணியும் மோதின. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில், என்.சி.ஓ.இ., அணி வீரர் சதீஷ் ஒரு பீல்டு கோல் அடிக்க, 27 வது நிமிடத்தில் ஒடிசா அணி வீரர் சதீஷ் கங்காடி பதில் கோல் அடித்து சமன் செய்தார்.அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் என்.சி.ஓ.இ., அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை, அந்த அணி வீரர் பாரஸ் கோலாக மாற்றினார். இதனால், என்.சி.ஓ.இ., அணி 2- - 1 என முன்னிலை வகித்தது. தொடர்ந்து, ஒடிசா அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு என்.சி.ஓ.இ., அணியினர் முட்டுக்கட்டை போட்டனர்.
இதனால், ஒடிசா அணி வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினர். இதனால், ஆட்டத்தின் 55 மற்றும் 58 நிமிடங்களில் அந்த அணியின் சுதீப், பிரசாத் அடுத்தடுத்து கோல் அடிக்க, இறுதியில் ஒடிசா அணி 3 - -2 என்ற கோல் கணக்கில் 'த்ரில்' வெற்றி பெற்றது.