/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இசை கச்சேரி - காயத்ரி மகேஷ் -- ரசிகர்களின் ஏக்கத்தை பாடலில் சுமந்த காயத்ரி
/
இசை கச்சேரி - காயத்ரி மகேஷ் -- ரசிகர்களின் ஏக்கத்தை பாடலில் சுமந்த காயத்ரி
இசை கச்சேரி - காயத்ரி மகேஷ் -- ரசிகர்களின் ஏக்கத்தை பாடலில் சுமந்த காயத்ரி
இசை கச்சேரி - காயத்ரி மகேஷ் -- ரசிகர்களின் ஏக்கத்தை பாடலில் சுமந்த காயத்ரி
ADDED : ஜன 13, 2025 01:45 AM

இயற்கை எழில் கொஞ்சும் அரங்கிற்கு நடுவே, ஆரம்ப கீதமாக 'ஸ்ரீ கிருஷ்ண கோவிந்த ஹரே முராரீ' என்ற பாடலை, கருணை கொட்டும் சிம்மேந்திர மத்யமத்தில் பாடி நிகழ்ச்சியை துவக்கினார், பிரபல பாடகி காயத்ரி மகேஷ். 'சர்சுர் ஆர்ட்ஸ் பவுண்டேஷன்' சார்பில், ஆழ்வார்பேட்டையில் இந்த கச்சேரி நடந்தது.
வைகுண்ட ஏகாதசி நன்னாளில், வாசுதேவனின் புகழைப் பாடி பக்தி பரவசத்துடன், நாமசங்கீர்த்தன பிரவேசத்திற்கு ரசிகர்களை வரவேற்றார்.
அடுத்ததாக, 'ஆலயம் அருள் ஆலயம்' எனும் பாடலை, தபோவனம் சத்குரு ஞானாநந்த சுவாமி மீது, மிஸ்ர கமாஸ் ராகத்தில் பாடலானார்.
அதில் வரும் 'உகந்த எங்களை ஏன் மறந்தாய்... உரைக்காமல் நீ ஏன் மறைந்தாய்' வரிகளை பாடும்போது, அனைவரது ஏக்கத்தையும் அவரே சுமந்து பாடியது போல பிரமிப்பு செய்தார்.
பின், நாமாவளி மற்றும் மராட்டி அபங் பாடினார். இதில் நாமாவளி பாடும்போது எழுந்த இசைத் துள்ளலுக்கு, அரங்கமே துள்ளியது. பக்கவாத்தியங்கள் பங்களிப்பும் பலே!
தொடர்ந்து, அறுபடை வீடுகளுள் ஒன்றான பழனி திருத்தலத்தைப் போற்றி, 'பழனி ஆண்டவர் பவனி வருகிறார்' பாடலைப் பாடி, அழகு முருகனை அபிஷேகம் செய்யும் நிகழ்வை, நம் கண் முன் கொண்டுவந்தார்.
பின், 'ஹர ஹரோ ஹரா முருகா ஹர ஹரோ ஹரா' நாமாவளியைப் பாடும் போது, வானிலையில் ஏற்படும் மாற்றம் போல, மன நிலையில் மாற்றம் ஏற்பட்டது. கந்தன் காவடி தோளில் ஏறினால் ஆடாதவரும் உண்டோ என்பதைப் போல, காயத்ரியின் குரலுக்கும், பக்கவாத்திய வாசிப்புக்கு அரங்கமே ஆடியது.
அடுத்து, திருவண்ணாமலை திருத்தலத்தைப் போற்றி, திருநாவுக்கரசர் இயற்றிய 'வானனை மதி சூடிய' தேவாரத்தை, கீரவாணி ராகத்தில் பாடி, 'சிவாய பரமேஸ்வராய சந்திரசேகராய நம ஓம்' பாடி முடித்தார்.
இறுதியாக, பண்டரீபுரத்தை எடுத்துக் கொண்டார். மராட்டி அபங்கை பாடி துவங்கினார். 'விட்டல விட்டல' பாடும் போது, அனைவரும் விடாமல் கைத்தட்டி உற்சாகமாகப் பாடினர்.
ஹார்மோனியம் கலைஞர் கோமதி சங்கர், மிருதங்கத்தில் ஹரிஹரன், டோலக்கில் மணிகன்டன் ஆகியோர் வாசிப்பு பிரமாதம். துணை பாடகிகள் மது, நித்யஸ்ரீ, பூஜா ஆகியோர், தங்களது பணியை சிறப்பாக கையாண்டனர்.
கச்சேரியை நிறைவு செய்த போதும், ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க, 'ரெங்கம்மா மாதி ரெங்கம்மா' பாடும்போது, வந்திருந்த ரசிகர் கூட்டம் ஆடி, பாடி, ரசித்து இசையில் லயித்தனர்.
- நமது நிருபர் -