ADDED : ஜன 08, 2024 01:03 AM

தி.நகர், பாரத் கலாச்சார் அரங்கில் முனைவர் காமாட்சி, இசை கச்சேரி நிகழ்த்தினார். முதலாவதாக 'ஸரஸூட' எனும் ஆதி தாளம், சாவேரி ராகத்தில் பட்டணம் சுப்பிரமணிய அய்யர் இயற்றிய வர்ணத்தை பாடினார்.
பின், தியாகராஜரின் ஆதி தாளம், நாட்டை ராகத்தில் அமைந்த 'நின்னே பஜன' கீர்த்தனையை பாடினார். இங்கு சரணத்தில் 'சீதா நாத' என துவங்கும் வரிகளை பாடிய விதம் அழகு.
கீர்த்தனையின் முடிவாக அமைந்த ம்ரிஸ், ரிஸ்நி, ஸ்நிப எனத் துவங்கும் கோர்வை பொருத்தமாக அமைந்தது.
ரீதிகவுளை ராக ஆலாபனையை துவங்கி, மேல் கால பிரயோகங்களால் ரீங்காரமிட்டார். அதே ரீங்காரத்தை வயலினில் இசைத்தார் தீபிகா.
இந்த ராகத்தில், சுப்பராய சாஸ்திரி இயற்றிய மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த 'ஜனனி நின்னுவினா' கீர்த்தனையைப் பாடினார்.
இதில் அமைந்த சிட்டை ஸ்வரம் விசேஷம். தொடர்ந்து, கல்யாணி ராக ஆலாபனை துவங்கியது.
தேர்ந்தெடுத்த பிரயோகங்களால் ராகத்தை அலங்கரித்தார். தரஸ்தாயி பகுதிகளில் பாடிய ஆலாபனை அற்புதம்.
இந்த ராகத்தில் தியாகராஜர் இயற்றிய ஆதி தாளத்தில் அமைந்த 'ஏதாவுனாரா' கீர்த்தனையை பாடினார். இங்கு, 'ஸ்ரீ கருடகு தியாக' வரிகளை நிறைவாக கீழ், மேல் காலங்களில் நிரவல் செய்தார்.
இதே வரிகளுக்கு ஸ்வரம் வாசித்த விதமும், மேலும் குறைப்பு முறையில் இருவரும் இசைத்த விதமும் 'ஸ்' எனும் ஸ்வரத்தை வைத்து இசைத்த விதமும் மனம் கவர்ந்தது.
மிருதங்கம் குரு ராகவேந்திரா, முகர்சிங் மணிகண்டன் ஆகியோர், சிறியதொரு காலத்தில் சிறப்பானதொரு கோர்வைகளால் அந்த நேரங்களை லயச் சொற்களால் இனிமையாக்கினர்.
நிறைவாக, தன் எழுத்துக்களால் இந்த உலகை ஆண்டு கொண்டிருக்கும் சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயற்றிய, காபி ராகத்தில் அமைந்த 'பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள் மாமயில் மீது மாயமாய் வந்தான்' எனும் பாடலை பாடினார்.
பார்வை திறன் குறைபாடுடைய காமாட்சியின் கச்சேரி, மனதில் நீங்காத இசை ஒளியை கூட்டியது.
-சத்திரமனை ந.சரண்குமார்