/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'துலா'வின் இயற்கை உணவு கண்காட்சி நாளை துவக்கம்
/
'துலா'வின் இயற்கை உணவு கண்காட்சி நாளை துவக்கம்
ADDED : அக் 18, 2024 12:30 AM

சென்னை, அக். 18--
'துலா' அமைப்பின், 10ம் ஆண்டு விழா சென்னையில் நாளை துவங்குகிறது.
இயற்கை வேளாண் கூட்டமைப்பை சேர்ந்த அனந்து கூறியதாவது:
ஆடைக்காக நிலம், நீர், காற்றை அதிகம் மாசுபடுத்திவிட்டோம். இதற்கு மாற்றாக 'துலா' அமைப்பு, 10 ஆண்டுகளுக்கு முன் கைத்தறி, நெசவு, இயற்கை சாயமிடும் தொழில்நுட்பங்களை மீண்டும் அறிமுகம் செய்தது.
அந்த பெயரில் பாரம்பரிய பருத்தியில் இருந்து, கையால் நுால் நுாற்று, கைத்தறிகளில் நெய்து, இயற்கை வண்ணங்களால் ஆன உடைகளை தயாரித்து வழங்கி வருகிறது.
துலாவின், 10ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, அக்., 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் உள்ள, 'ஸ்பேசஸ்' அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அங்கு, பாரம்பரிய நாட்டு பருத்தி ஆடைகளை உற்பத்தி செய்யும் கைவினை கலைஞர்களை சந்திக்கலாம். கைத்தறியில் பிரசித்தி பெற்ற, ஆந்திராவின் பொன்டுருவிலிருந்து வரும் பெண்கள், பாரம்பரிய பருத்தியில் இருந்து விதையை நீக்கி, மீன் கழுத்து எலும்பு கொண்டு சீர்படுத்தி, கையால் நுால் நுாற்கும் நிகழ்வு, சென்னையில் முதன்முறையாக நிகழ்த்தப்படுகிறது.
இரண்டு நாள் விழாவில் காலை, 10:30 முதல் இரவு 7:00 மணிவரை பயிற்சி பட்டரைகள், பாரம்பரிய இயற்கை உணவுகள், கலை நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
விபரங்களுக்கு, 96297 84800, 80561 63560 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.