UPDATED : நவ 29, 2026 07:48 PM
ADDED : நவ 29, 2026 07:48 PM
எண்ணுார்: இருப்பு வைக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு குழாய்களில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எண்ணுார் அடுத்த எர்ணாவூர், பாலாஜி நகரில் தனியார் நிறுவனத்திற்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் பதிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம், எர்ணாவூர் மேம்பாலம் அருகே, பிளாஸ்டிக் குழாய்களை இருப்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை, அந்த குழாய்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. பல அடி உயரத்திற்கு தீப்பற்றி எரிந்ததால், அருகேயிருந்த தைல மரமும் தீக்கிரையானது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், எண்ணுார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த எண்ணுார் தீயணைப்பு படை வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட இடத்தில், தரைக்கு கீழ் சி.பி.சி.எல்., குழாய் செல்வதால் மக்கள் பீதியடைந்தனர்.
சாலையோரம் இருப்பு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்களை, யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தனரா என்ற கோணத்தில் எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர். தீக்கிரையான குழாய்களின் மதிப்பு, 30 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
