ADDED : ஆக 23, 2025 11:16 PM

6 கிலோ கஞ்சா
வைத்திருந்தவர் கைது
பெரம்பூர்: ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம், மங்களபுரம் பகுதியில் 6 கிலோ கஞ்சா வைத்திருந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சமீர், 27, என்பவரை, ஓட்டேரி போலீசார் நேற்று கைது செய்தனர். முகப்பேரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த முகமது, ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
--
ரகளை செய்த
ரவுடிகள் கைது
பெரம்பூர்: பெரம்பூர், கவுதமபுரத்தைச் சேர்ந்த லோகேஷ், 27, நண்பர் கிஷோர், 20, ஆகியோர், இரு நாட்களுக்கு முன், இரவில் திரு.வி.க., நகர் கம்பர் தெருவில் டீ குடித்து கொண்டிருந்தனர். அங்கு மது போதையில் வந்த நான்கு ரவுடிகள், பணம் கேட்டு இருவரையும் தாக்கினர்.
இதில் காயமடைந்த லோகேஷ் மற்றும் கிஷோர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, திரு.வி.க., போலீசில் புகார் அளித்தனர். போலீசார், ஆகாஷ் என்ற 'முட்ட' கண்ணன், 19, விக்கி, 21, ஆகிய இருவரை நேற்று முன்தினம் கைது செய்த நிலையில், ஜெயின் விக்னேஷ், 20, ஷியாம் என்ற சுரேஷ்பாபு, 22, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.
--
போதை வஸ்துகள்
ஏழு பேர் கைது
மாதவரம் அருள் நகர் பேருந்து நிலையம் அருகில், 7 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பவுடர், 7 எல்.எஸ்.டி., ஸ்டாம்ப் வடிவ மாத்திரைகள், 23 எம்.டி.எம்.ஏ., பில்ஸ் ஆகிய போதை தரும் வஸ்துக்களை வைத்திருந்த ஈஸ்வர், 29, அபிஷேக், 25, லிங்கேஸ்வரன், 25, வசந்த்ராஜ், 30, ஆகியோரை, மாதவரம் போலீசார் நேற்று கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை வஸ்துகள் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 32, அர்ஜூன், 20, சரவணன், 57, ஆகியோர், அமைந்தகரை, மேத்தா நகர் மைதானம் அருகே, குட்கா புகையிலை பொருட்களை விற்றனர். அவர்களை நேற்று கைது செய்த அமைந்தகரை போலீசார், 5.77 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.