ADDED : செப் 06, 2025 12:41 AM

சூதாடிய மூவர் கைது
வளசரவாக்கம், லாமெக் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், சூதாட்டத்தில் ஈடுபட்ட சிவகங்கையைச் சேர்ந்த சுப்பிரமணி, 40, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த பஞ்சவர்ணம், 62, பூந்தமல்லி கண்ணியப்பன், 68, ஆகிய மூவரை, வளசரவாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து நான்கு சீட்டு கட்டுகள், 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
போன் திருடியவர் கைது
அரியலுார் மாவட்டம், கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த ராகுல், 23, கோயம்பேடு சந்தையில் தங்கி, மூட்டை துாக்கும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் துாங்கியபோது, அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திருடு போனது. கோயம்பேடு போலீசார் விசாரித்து, மொபைல் திருடிய, அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரபோஸ், 27, என்பவரை கைது செய்தனர்.
வாலிபர் மீது தாக்கு
திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் அப்துல் ஹுசைன், 19; 'ஏசி' மெக்கானிக். கடந்த 2ம் தேதி மாலை மெரினாவில் நடைபயிற்சி சென்றபோது, ஏற்கனவே அறிமுகமான ரிஸ்வான், 22, என்பவர் அவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். பணம் தராததால் அவரை தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்தார். மெரினா போலீசார் வழக்கு பதிந்து, மெக்கானிக்கை தாக்கிய திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரிஸ்வானை நேற்று கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை பாதிக்கும் வகையில், அமெரிக்க அரசு அதிக வரி விதித்துள்ளதாக குற்றஞ்சாட்டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், சென்னை அண்ணா சாலை தாராபூர் டவர் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் தலைமை வகித்தார். இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
குறும்பட நடிகை தற்கொலை
ஆவடி, கோவில்பதாகை, கலைஞர் நகரைச் சேர்ந்த அசோக்குமாரின் இளைய மகள் ரூபகலா, 31; குறும்படங்களில் துணை நடிகையாக பணியாற்றி வந்தார்.
திருமணமாகாததால் மன உளைச்சலில் இருந்த ரூபகலா, நேற்று முன்தினம் இரவு, படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், ரூபகலா சடலத்தை நேற்று மீட்டு, அவரது தற்கொலை குறித்து விசாரிக்கின்றனர்.
8 படகுகள் கொள்முதல்
வடகிழக்கு பருவமழை பாதிப்பை தடுக்க, முன்னெச்சரிக்கை பணிகளை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. காவல் துறையினரும், மழைக்கால மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் மீட்பு பணிக்காக, 1 கோடி ரூபாய் செலவில் எட்டு படகுகளை கொள்முதல் செய்கிறது. தற்போது 2 படகுகள் வாங்கப்பட்டுள்ள நிலையில், மற்றவை விரைவில் வாங்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.