ADDED : செப் 14, 2025 03:13 AM
வாகனம் மோதி 45 வயது பெண் பரிதாப பலி
படப்பை: படப்பை அருகே செரப்பணஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று அதிகாலை 4:00 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க பெண், சாலையை கடக்க முயன்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
துாய்மை பணியாளருக்கு கத்திக்குத்து
அம்பத்துார்: அம்பத்துார், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த துாய்மை பணியாளர்கள் மகிமை தாஸ், 38, ஸ்டிபன், 36. இவர்களது மகன்களுக்கு அடிக்கடி சண்டை ஏற்படவே, இருவரது குடும்பத்திற்கும் இடையே முன்விரோதமாக மாறியது. இந்தநிலையில், கொரட்டூர், ராஜிவ் நகரில் நேற்று காலை 10:30 மணியளவில், மகிமை தாஸ் துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு மதுபோதையில் வந்த ஸ்டீபன், மகிமை தாஸிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால், கழுத்தில் குத்தி தப்பினார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கொரட்டூர் போலீசார் ஸ்டீபனை கைது செய்தனர்.
வீடு புகுந்து திருடிய இருவர் கைது
மாடம்பாக்கம்: மாடம்பாக்கம், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மோகன், 40; தாம்பரம், காசநோய் மருத்துவமனை ஊழியர். இவர், நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த இரண்டே கால் சவரன் நகை, 13,000 ரூபாய் திருடு போயிருந்தன. விசாரித்த சேலையூர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார், 21, அஸ்லின், 18, ஆகியோரை கைது செய்தனர்.
பெண் குளிப்பதை எட்டி பார்த்த வாலிபர் சிக்கினார்
வேளச்சேரி: வேளச்சேரியைச் சேர்ந்த 35 வயது பெண், குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம், இவர் குளியல் அறையில் குளித்து கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த எட்வின், 19, என்பவர் எட்டிப்பார்த்துள்ளார். சில தினங்களுக்கு முன், அப்பெண் சாலையில் நடந்து சென்றபோது, ஆபாசமாக சைகை செய்து, பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்த வேளச்சேரி போலீசார், நேற்று எட்வினை கைது செய்தனர்.
பெண் போலீசின் ஸ்கூட்டரை திருடியவர் கைது
குரோம்பேட்டை: தமிழக கவர்னர் ரவி, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்றார். இதற்காக பாதுகாப்பு பணியில், போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணியில் இருந்த குன்றத்துார் காவல் நிலைய பெண் போலீஸ் ஜமீமா, 29, என்பவர், சானடோரியத்தில் சாலையோரம் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருடு போனது. குரோம்பேட்டை போலீசாரின் விசாரணையில், குரோம்பேட்டை, லட்சுமி புரத்தைச் சேர்ந்த பிரசாந்த், 39, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.