ADDED : செப் 26, 2025 02:27 AM

வீட்டின் பால்கனி
இடிந்து விழுந்தது
ஆலந்துார்: மடுவின்கரை, 3வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன், நேற்று முன்தினம் நள்ளிரவு, முதல் தளத்தின் பால்கனி திடீரென இடிந்து பலத்த சப்தத்துடன் விழுந்தது. கண் விழித்த அக்கம் பக்கத்தினர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
பால்கனி விழுந்த வீடு, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. யாரும் குடியிருக்கவில்லை. தகவல் அறிந்து சென்ற, 160வது வார்டு ஊழியர்கள், பாதி உடைந்த நிலையில் இருந்த பால்கனி தளத்தை உடைத்து, கட்டட கழிவுகளை அகற்றினர்.
மொபைல் திருடியவர்
சென்ட்ரலில் கைது
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணியர் காத்திருப்பு பகுதியில், மொபைல் போன் திருட்டில் ஈடுபட்ட, கேரள மாநிலத்தைச் சேர்ந்த வினோத், 36 என்பவரை போலீசார் கைது செய்தனர். மேடவாக்கத்தில் வசித்து வரும் இவரிடம் இருந்து, 11 மொபைல் போன்களை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதவிர, பேசின்பாலம் ரயில் நிலையத்தில், பயணியரிடம் மொபைல்போன்கள் திருடிய கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், 38, அம்பத்துாரைச் சேர்ந்த யோகேஷ்வரன், 24, ஆகியோரையும், ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
நட்பாக பழகி
5 சவரன் செயின் பறிப்பு
பெரம்பூர்: கொடுங்கையூரை சேர்ந்தவர் விமலா, 25. இவரது கணவர் சதீஷ், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். விமலாவின் வீட்டு எதிரே, இரு மாதங்களுக்கு முன் புதிதாக வாடகைக்கு குடிவந்த பூஜா என்பவர், விமலாவுடன் நட்பாக பழகி வந்தார்
நேற்று முன்தினம் மாலை, விமலாவை பெரம்பூரில் உள்ள அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பூஜா, அலங்காரம் செய்ய வேண்டும் எனக்கூறி, விமலா அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை கழற்றி, கைப்பையில் வைக்குமாறு கூறியுள்ளார்.
பின், விமலா அசந்த நேரம் பார்த்து, தங்க செயின் அடங்கிய பையை, பூஜா திருடிச் சென்றுள்ளார்.
ரவுடியை செங்கல்லால்
தாக்கியவர் கைது
திருமங்கலம்: மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனியை சேர்ந்தவர் ரவுடி 'கவுச்சி' கார்த்திக், 42; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் மாலை, திருமங்கலம், 100 அடி சாலையில், ஆட்டோவை நிறுத்திவிட்டு டீக்கடையில் நின்றிருந்தார்.
அப்போது, அறிமுகமில்லாத நபர் ஒருவர், கார்த்திக் மீது செங்கல்லால் தாக்கி தப்பினார். திருமங்கலம் போலீசார் விசாரணையில் விக்னேஷ்வரன், 30, என்பவர், முன்பகை காரணமாக தாக்கியதாக ஒப்புக் கொண்டார். விசாரணைக்கு பின், நேற்று மாலை விக்னேஷ்வரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
வழிப்பறி செய்த
ரவுடி கைது
ஜெ.ஜெ நகர்: முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் தர்வேஷ் மைதீன், 56; பூ விற்று வருகிறார்.
கடந்த 19ம் தேதி இரவு, அவரது கடைக்கு வந்த சிலர், கத்திமுனையில் தர்வேஷ் மைதீனிடம் இருந்து, 800 ரூபாயை பறித்து தப்பினர்.
ஜெ.ஜெ., நகர் போலீசார், வெற்றிவேல், 25, என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ரவுடி கார்த்திக், 26, என்பவரை, நேற்று கைது செய்தனர்.