ADDED : செப் 29, 2025 02:35 AM
வீட்டிற்குள் புகுந்த
நல்ல பாம்பு மீட்பு
முகப்பேர்: முகப்பேர் கிழக்கு, பஜனை கோவில் தெருவில் உள்ள வீட்டில் நேற்று காலை 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. அதை விரட்ட முயல, அடுத்தடுத்த வீடுகளில் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்து வெளியேறினர். தகவலறிந்து ஜெ.ஜெ நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்குள், அருகே இருந்த காலி மனையில் பதுங்கியது. தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி, பாம்பை பிடித்து சென்றனர்.
மொபைல் போன்
திருடர்கள் கைது
எம்.கே.பி.நகர்: வியாசர்பாடி, புதுநகர் 'ஏ' பிளாக்கைச் சேர்ந்தவர் ஜலால், 39; மொபைல் போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர் தன் மகள் சித்திக் பாத்திமாவுடன், வியாசர்பாடி, முல்லை நகர் சந்திப்பு அருகே பைக்கில் வந்த போது, இருவர் ஜலால் பைக்கை மறித்து, மொபைல் போனை பறித்து தப்பினர். எம்.கே.பி.நகர் போலீசாரின் விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திக், 27, ஜெகன், 31 ஆகியோர் என்பது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற
இருவர் கைது
கொடுங்கையூர்: கொடுங்கையூர், சின்னாண்டி மடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கொடுங்கையூர், எழில் நகரைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில், 30, ஆரிப், 27 ஆகியோரை கைது செய்த கொடுங்கையூர் போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். திண்டுக்கல், பழனியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
போதை மாத்திரை
விற்றோர் கைது
எம்.ஜி.ஆர்., நகர்: ஜாபர்கான்பேட்டை, வாசுதேவன் நகர், ஆற்றங்கரையோர பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த சசிகுமார், 24, சூரியா, 22 ஆகியோரை எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைக்கு பயன்படுத்தப்பட்ட மாத்திரைகள், சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது.