ADDED : அக் 21, 2025 11:56 PM

தடுப்பில் பைக் மோதி
வாலிபர் பலி
வேளச்சேரி: நேபாளத்தைச் சேர்ந்தவர் அக் ஷயகுமார், 21. வேளச்சேரி, லட்சுமிபுரத்தில் தங்கி, பிரியாணி கடையில் பணி புரிந்தார். நேற்று மாலை பணி முடிந்து, வேளச்சேரி விரைவு சாலை வழியாக வீடு நோக்கி செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலை மைய தடுப்பில் மோதியது.
இதில், அக் ஷயகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
வீடு புகுந்து
வக்கீல் மீது தாக்குதல்
நொளம்பூர்: முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 46; வழக்கறிஞர். இவர் தாய் தில்லைநாயகி, 76 என்பவருடன் வசித்து வருகிறார். உடல்நல குறைவு காரணமாக, ஆறு மாதங்களுக்கு முன் உயிரிழந்த ஜெயகுமாரின் பெரியம்மா கவுரிக்கு, ஜெயகுமார் இறுதிச்சடங்கு நடத்தியுள்ளார்.
கோடம்பாக்கத்தில் உள்ள பெரியம்மாவின் இடத்தில் பங்கு கேட்டு, அவரது மகள் சுகந்தியிடம் ஜெயகுமார் பேச்சு நடத்தியாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, சுகந்தி, அவரது கணவர் ஜாகிர் உசேன், மகன் ரோஷன் ஆகிய மூவரும், ஜெயகுமாரின் வீடு புகுந்து அவரையும் அவரது தாயையும் தாக்கியதாக கூறப்படுகிறது. நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மீட்பு
ஆவடி: ஆவடி அடுத்த காட்டூர் சிப்காட் அருகே உள்ள டீக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டியில் தேங்கி இருந்தது.
அதற்கு மேல், இலகுவான கான்கிரீட் மூடி போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை அங்கு சுற்றி கொண்டிருந்த பசு, கான்கிரீட் மூடி உடைந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்துள்ளது.
அக்கம்பக்கத்தினர் ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி பசுவை பத்திரமாக மீட்டனர். பின், பசு மாட்டை, அதன் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், 51, என்பவரிடம் ஒப்படைத்தனர்.