ADDED : அக் 24, 2025 01:57 AM
வடமாநில
தொழிலாளர்கள்
உதவிகரம்
பூந்தமல்லி: பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில், நேற்று சாப்பிட்டு வந்த பெண் ஒருவரின் தங்க கம்மல், சாலையில் தேங்கிய மழைநீரில் விழுந்தது. 1 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி இருந்ததால், கம்மலை தேடி எடுக்க முடியாமல், அந்த பெண் சிரமப்பட்டார். இதை, அங்கு மெட்ரோ ரயில் மேம்பால கட்டுமான பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் கவனித்து, தண்ணீரை அகற்றி, கம்மல் கண்டெடுக்க உதவினர்.
தீபாவளி சீட்டு
மோசடி
முதியவருக்கு வலை
கொடுங்கையூர்: வியாசர்பாடி, சாமந்திப்பூ காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 36; கூலித்தொழிலாளி. இவர் கொடுங்கையூர், டி.வி.கே., 2வது லிங்க சாலையைச் சேர்ந்த தங்கராஜ், 70, என்பவரிடம் தீபாவளி சீட்டு கட்டி வந்துள்ளார்.
கடந்த 2024 செப்டம்பர் துவங்கி, வாரம் 250 ரூபாய் வீதம், 55 வாரங்கள் கட்டியுள்ளார். அவரிடம் 200 பேர் சீட்டு கட்டி வந்துள்ளனர். சீட்டு முடிந்த நிலையில், பலருக்கும் தொகையை வழங்கிய நிலையில், ராஜ்குமார் உட்பட, 29 பேருக்கு, 3.98 லட்சம் ரூபாயை திருப்பி தராமல், மோசடி செய்துள்ளார். கொடுங்கையூர் போலீசார், தங்கராஜை தேடி வருகின்றனர்.
மழைநீர் தேங்கிய
பகுதிகளில்
மருத்துவ முகாம்
ராயபுரம்: சென்னையில் மழை பாதிப்பு மற்றும் தாழ்வான பகுதிகளில், மருத்துவ முகாம்களை மாநகராட்சி நடத்த துவங்கியது. அதன்படி, அம்பத்துார் மண்டலம் முனுசாமி கோவில் தெரு, ராயபுரம் மண்டல் யானைகவுனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சளி உள்ளிட்ட பாதிப்புகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
மேடவாக்கம்
'மாஜி' தலைவர்
மரணம்
பெருங்குடி: மேடவாக்கம் ஊராட்சியின் தி.மு.க., தலைவர் சிவபூஷணத்தின் கணவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ரவி, சிறுநீரக செயலிழப்பு காரணமாக, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு காலமானார். முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சென்று, ரவியின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

