ADDED : நவ 09, 2025 04:20 AM
மாற்றுத்திறன் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, மற்றும் குரூப் 4 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு செய்துள்ளது. மாற்றுத்திறன் தேர்வர்கள் பயன்பெறும் வகையில், இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள், கிண்டி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை முதல் துவங்குகின்றன.
விருப்பம் உள்ளோர், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன், கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
பாம்பு கடித்து டெலிவரி ஊழியர் 'அட்மிட்'
திருநின்றவூர்: திருநின்றவூர், கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகமணி, 45. கடைகளுக்கு சிப்ஸ் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.
இவர், நேற்று காலை, வீட்டின் வெளியே இருந்த பழைய கட்டைகளை ஒழுங்குபடுத்திய போது, வலது காலில் நல்ல பாம்பு கடித்து மயங்கினார். அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
காவலர் தேர்வு 2,118 பேர் பங்கேற்பு
ஆவடி: தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் என, 3,644 காலி பணியிடங்களுக்கான பொது தேர்வு, தமிழகம் முழுதும் இன்று நடக்கிறது.
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பெருமாள்பட்டு, இந்து கல்லுாரி, ஆவடி மற்றும் திருவேற்காடு பகுதிகளில் நடக்கும் இந்த தேர்வில், 1,703 ஆண்கள் மற்றும் 415 பெண்கள் என, மொத்தம் 2,118 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மடிப்பாக்கம்: மடிப்பாக்கத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. அதை முன்னிட்டு, இன்று விமான கலச ஸ்தாபனம் நடந்தது. தொடர்ந்து, அஷ்டபந்தன மருந்து சார்த்துதல், ஐந்தாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடக்கின்றன. கும்பாபிஷேக நாளான நாளை காலை, ஆறாம் கால யாகசாலை, மகாபூர்ணாஹுதி, யாத்ராதானம் நடக்கிறது.
காலை 9:30 மணிக்கு, விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, விநாயகர், சப்தகன்னிமார், மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

