பிஜி சிறுவனுக்கு நுண்துளை அறுவை சிகிச்சைநீர் கட்டியை அகற்றிய மியாட் மருத்துவர்கள்
பிஜி சிறுவனுக்கு நுண்துளை அறுவை சிகிச்சைநீர் கட்டியை அகற்றிய மியாட் மருத்துவர்கள்
ADDED : செப் 06, 2018 02:34 AM
சென்னை:பிறந்தது முதல் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த, பிஜி நாட்டைச் சேர்ந்த, நான்கு வயது சிறுவனுக்கு, நுண்துளை அறுவை சிகிச்சை மூலம், கட்டியை அகற்றி, மியாட் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பிஜி தீவைச் சேர்ந்த, நான்கு வயது சிறுவனின் வயிற்றில் இருந்த நீர் கட்டியை, 'லேப்ரோஸ் கோபிக் கீ ஹோல்' அறுவை சிகிச்சை மூலம், மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை மருத்துவர்கள், வெற்றிகரமாக அகற்றினர்.
முன்னேற்றம் இல்லை
இதுகுறித்து, மியாட் மருத்துவனை தலைவர், மல்லிகா மோகன்தாஸ், குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் எம். ராகவன், குழந்தைகள் மயக்க மருந்து நிபுணர்,சர்வவினோதினி ஆகியோர் கூறியதாவது:பிஜி நாட்டைச் சேர்ந்த, நான்கு வயது சிறுவன் அர்னவ், பிறந்த ஆறு மாதங்களில், தினமும் அழுது கொண்டே இருந்துள்ளான். இதனால், மாதம்தோறும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
குழந்தைக்கு பசியெடுக்காததால், எடையும் குறைவாக இருந்துள்ளது. குழந்தையின், 10வது மாதத்தில், 'ஹெர்னியா' பாதிப்பு இருந்ததாக, அறுவை சிகிச்சை செய்து உள்ளனர்.அதன் பிறகும், பிரச்னை நீடித்தது. இதையடுத்து, ஒன்றரை வயதில், தொப்புள் குழிக்கு அருகில், அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.இருந்தும், குழந்தையின் நிலையில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
குழந்தைக்கு, மூன்று வயது ஆன போது, அவனது வயிற்றில், 10 செ.மீ., அளவு கொண்ட, கட்டி இருப்பது தெரியவந்தது. குழந்தை வளரும் போது, கட்டி தானாக சரியாகிவிடும் என, மருத்துவர்கள் கூறி உள்ளனர்.இந்நிலையில், எங்கள் மருத்துவ குழு, பிஜிக்கு சென்ற போது, இந்த குழந்தையை பரிசோதித்தோம். நாங்கள் அளித்த நம்பிக்கையில், அர்னவின் பெற்றோர், அவனை சென்னை அழைத்து வந்தனர்.
மருத்துவ பரிசோதனையில், அர்னவ் வயிற்றில் இருந்தது, நீர் கட்டி என தெரியவந்தது. மேலும், அந்த கட்டி, வயிற்றில் இருந்த முக்கியமான உறுப்புகளை, உள்நோக்கி அழுத்தியபடி இருந்தது.
ரூ.2 லட்சம் செலவு
இதையடுத்து, சிறுவனுக்கு, 'கீ ஹோல்' எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தோம். சிறுவனின் வயிற்றில், 1 செ.மீ., அளவிற்கு, துவாரம் வழியாக, கேமராவை உள்ளே செலுத்தினோம்.இதில், அந்த கட்டி, 20 செ.மீ., வளர்ந்திருப்பது தெரியவந்தது.இரண்டு மணி நேரத்தில், லேப்ரோஸ்கோபிக் முறையில், நுண்துளை அறுவை சிகிச்சை செய்து, 1.8 கிலோ நீர் கட்டியை, முற்றிலுமாக அகற்றினோம்.
இந்த அறுவை சிகிச்சைக்கு, இரண்டுலட்சம் ரூபாய் மட்டுமே செலவானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
