ADDED : அக் 14, 2019 02:36 AM

சென்னை:வீட்டுவசதி வாரியம் சார்பில், 8.70 கோடி ரூபாயில், வேளச்சேரியில், அம்மா, 'ஏசி' திருமண மண்டபம் கட்டும் பணி, இரண்டு மாதத்தில் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 1992ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், 72 தெருக்கள் அமைத்து, 1,800 மனைகள் பிரிக்கப்பட்டன. தற்போது, 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.மனை பிரிக்கும்போது, திருமண மண்டபம் கட்ட, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடம் ஒதுக்கப்பட்டது. வேளச்சேரி, அபார வளர்ச்சி அடைந்து வருவதால், ஒதுக்கப்பட்ட இடத்தில், திருமண மண்டபம் கட்ட, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது.இதையடுத்து, அம்மா, 'ஏசி' திருமண மண்டபம் கட்ட, 8.70 கோடி ரூபாய், தமிழக அரசு ஒதுக்கியது. மண்டபம் கட்டும் பணி, 2018 ஜூலை மாதம் துவங்கியது.முதல் மற்றும் இரண்டாவது மாடி, 9,000 சதுர அடி பரப்பளவு வீதம் கட்டப்படுகிறது. மூன்றாவது மாடியில், 2,000 சதுர அடி பரப்பளவில், ஆறு தங்கும் அறைகள் கட்டப்படுகின்றன.முதல் தளம் உணவு பரிமாற, இரண்டாவது தளம் மண மேடையாக வடிவமைக்கப்படுகிறது. மூன்று தளங்களிலும், குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது. அதோடு, 'லிப்ட்' மற்றும் தரைத்தளத்தில், 25 கார்கள் நிறுத்தும் வசதியுடன், கட்டடம் வடிவமைக்கப்படுகிறது. தற்போது, 85 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.இரண்டு மாதத்தில், அனைத்து பணிகளையும் முடிக்க, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.