/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உழவார பணிகளுக்கு அனுமதி தந்தாலே கோவில்கள் சீர்படும்! சிவதாமரை செல்வன் வேண்டுகோள்
/
உழவார பணிகளுக்கு அனுமதி தந்தாலே கோவில்கள் சீர்படும்! சிவதாமரை செல்வன் வேண்டுகோள்
உழவார பணிகளுக்கு அனுமதி தந்தாலே கோவில்கள் சீர்படும்! சிவதாமரை செல்வன் வேண்டுகோள்
உழவார பணிகளுக்கு அனுமதி தந்தாலே கோவில்கள் சீர்படும்! சிவதாமரை செல்வன் வேண்டுகோள்
ADDED : நவ 06, 2019 12:41 AM

''உழவாரப் பணி செய்ய, அடியார்களும், தன்னார்வலர்களும் காத்திருக்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அடியார்களை அலைக்கழிக்காமல், உரிய அனுமதி கொடுத்தாலே, கோவில்கள், நீர்நிலைகள் சீர்படும்,'' என்கிறார், 10 ஆண்டுகளாக சிவாலயங்களில் உழவாரப்பணி மேற்கொண்டு வரும் சிவதாமரை செல்வன். அவருடன் பேசியதிலிருந்து:
உங்களைப் பற்றி சொல்லுங்கள்?
அம்பத்துார், ஒரகடத்தில் வசிக்கிறேன். அப்பர்சாமியின் திருவடியை பின்பற்றி, 10 ஆண்டுகளாக உழவாரப் பணியை செய்து வருகிறேன். மாதத்தின் முதல் ஞாயிறு அன்று, ஏதாவது ஒரு சிவாலயத்திற்கு, 100 அடியார்களுடன் சென்று சுத்தப்படுத்துவோம். எண்ணெய் பிசுக்கை அகற்றுவது, சுவாமி வஸ்திரங்களை துவைப்பது, வளாகத்தை சுத்தப்படுத்துவது போன்ற பணிகளை செய்வோம். அந்த கோவில், தொடர்ந்து சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அப்பகுதி மக்களிடம் சென்று, உழவாரப் பணி என்றால் என்ன; கோவிலை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி என, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.தேவாரத்தையும், திருவாசகத்தையும், அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாதத்தின், மூன்றாவது ஞாயிறு அன்று, அடியார்களின் வீடுகளுக்கு சென்று, ஒவ்வொரு திருமுறையாக, முற்றோதுதல்செய்வோம்.
அடியாருக்கான தகுதியாக நீங்கள் பார்ப்பது என்ன?
அப்படி எந்த ஒரு தகுதியையும், நாங்கள் நிர்ணயிப்பது இல்லை. சிவபெருமான் மீது வைக்கும் அன்பு, முழுமையாக இருக்க வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இருந்தால், அதுவே அடியார் தன்மை என, நான் நினைக்கிறேன். திருமுறையில், அரியபொக்கிஷங்கள் உள்ளன. எல்லாவிதமான பிரச்னைகளுக்கும், திருமுறையில் தீர்வு சொல்லப்பட்டுள்ளது. 'உடலுக்கு உழவாரம்; நாவுக்கு தேவாரம்' என அப்பர்சாமி கூறியுள்ளார்.
இதுவரை எத்தனை கோவில்களில், உழவாரப் பணி மேற்கொண்டுள்ளீர்கள்?
கடந்த, 10 ஆண்டுகளில், 120 கோவில்களில், உழவாரப் பணி செய்யும் பாக்கியத்தை, இறைவன் கொடுத்துள்ளார். அவ்வாறு உழவார பணி செய்வதில், பெரும் ஆனந்தம் கிடைக்கிறது.
உங்களை வியக்க வைத்தஉழவாரப்பணி...
திருவள்ளுர் அருகே, புண்ணப்பாக்கத்தில் உள்ள புண்ணியகோடீஸ்வரர் கோவிலுக்கு சென்றோம். அந்த கோவில், 18 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. ஒரே நாளில், கோவிலை சுத்தப்படுத்தினோம். அதன்பின், அங்கு தொடர்ந்து, பூஜைகள் நடந்து வருவது மகிழ்ச்சியை தருகிறது.
உழவாரப்பணி தொடர்பாக, ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் எதிர்பார்ப்பது?
உழவாரப்பணி செய்ய சென்றால், நிறைய கோவில்களில் அனுமதி கிடைப்பதில்லை. அடியார்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.அடியார்கள் நிறைய பேர், உழவாரம் செய்ய காத்திருக்கின்றனர்.செல்லும் இடத்தில், நாங்கள் பணமோ, உணவோ, மற்ற எந்த விஷயத்தையும் கேட்பதில்லை. உழவாரம் செய்ய அனுமதி கொடுத்தாலே, பல கோவில்களும், அங்குள்ள நீர்நிலைகளும் சீர்படும்.
மக்கள் என்ன செய்ய வேண்டும்?
ஓர் அமைப்பை வைத்து, 100 பேருடன் சென்று செய்வது மட்டும், உழவாரப் பணி இல்லை. கோவிலுக்கு செல்பவர்கள், கோவில் வளாகத்தில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும். விளக்கு ஏற்றுபவர்கள், எண்ணெய் பாக்கெட்டையும், தீக்குச்சிகளையும் உரிய இடத்தில் போட வேண்டும். பிரசாதம் சாப்பிட்டு விட்டு, குப்பையை அப்படியே போடுகின்றனர்; அவ்வாறு செய்யாமல், குப்பையை உரிய இடத்தில் போட வேண்டம். பக்தர்கள் துாய்மையாக நடந்தாலே, கோவிலும் துாய்மையாக இருக்கும். இதுவே, பெரிய உழவாரப் பணி தான்!