தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு அரசுக்கு ஐகோர்ட் "நோட்டீஸ்'
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு அரசுக்கு ஐகோர்ட் "நோட்டீஸ்'
ADDED : ஜூன் 06, 2013 12:01 AM
சென்னை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
பாதிப்புசென்னையைச் சேர்ந்த, பாரதி கிரிக்கெட் கிளப்பின் கவுரவ செயலர், கதிரேசன் என்பவர் தாக்கல் செய்த மனு: எங்கள் கிரிக்கெட் கிளப், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணைப்பு பெற்றது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக, சீனிவாசன் உள்ளார்; பி.சி.சி.ஐ.,யின் தலைவராகவும் உள்ளார். கிரிக்கெட் சங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தும், தவறாக நிர்வகிக்கப்பட்டன. சங்கத்தின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தன.
சங்கத்தின் சொத்துக்கள், சீனிவாசனின் தனிப்பட்ட ஆதாயத்துக்கும், அவரது நிறுவனத்துக்கும் பயன்படுத்தப்பட்டன. புதிய ஸ்டேடியம் கட்டுவதற்கான ஒப்பந்தம், லார்சன் டூப்ரோ நிறுவனத்துக்கு வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது; ஆனால், 'கணேசன் பில்டர்ஸ்' என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துடன், வணிக தொடர்பு உள்ளது என, கூறப்படுகிறது.குத்தகை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு, தமிழக அரசின் நிலம், குத்தகைக்கு விடப்பட்டது. அந்த நிலத்தில் உள்ள கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமானம் எழுப்பப்பட்டது. இதற்கு, அரசின் முன் அனுமதி பெறப்படவில்லை. சங்கத்தின் நிர்வாகக் குழு, முறையாக செயல்படவில்லை. பதிவு செய்யப்பட்ட இந்த சங்கத்தின் செயல்பாடுகள், தவறாக நிர்வகிக்கப்பட்டன.
கிரிக்கெட் சங்க நிர்வாகக் குழுவின், முறையற்ற நிர்வாகம் குறித்து, தமிழக அரசுக்கு, கடந்த ஆண்டு, மார்ச் மாதம், விரிவான மனுவை அனுப்பினோம். விசாரணை நடத்தி, மாவட்டப் பதிவாளர் தனது அறிக்கையை சமர்ப் பித்துள்ளார். இதையடுத்து, கமிட்டி
உறுப்பினர்களுக்கு, பதிவுத் துறை சார்பில், விளக்கம் கோரி 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
தனி அதிகாரிநிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக் கூடாது என்றும், தனி அதிகாரியை ஏன் நியமிக்கக் கூடாது என்றும், அந்த நோட்டீசில் கோரப்பட்டது. அவசரகதியில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நிர்வாகக் குழு உறுப்பினர்களை தப்ப வைக்கும் விதத்தில், மறைமுகமான
திட்டம் இருந்துள்ளது. எனவே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மீது, நாங்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், தகுந்த நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதி சசிதரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு அரசு தரப்பில் பதிலளிக்க, சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை, 'நோட்டீஸ்' பெற்றுக் கொண்டார். மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசுக்கும், கிரிக்கெட் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார்.
