செய்தித்தாள் வினியோகிப்பவரின் ‘எலக்ட்ரிக்’ ஸ்கூட்டர் தீக்கிரை
செய்தித்தாள் வினியோகிப்பவரின் ‘எலக்ட்ரிக்’ ஸ்கூட்டர் தீக்கிரை
ADDED : செப் 17, 2026 05:33 PM
பெருங்களத்துார்: செய்தித்தாள் வினியோகிக்க சென்ற இளைஞரின், ‘எலக்ட்ரிக்’ ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
பெருங்களத்துாரை அடுத்த மப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் குமார், 24. சிறு வயதில் இருந்தே, காலையில் வீடு வீடாக செய்தித்தாள் வினியோகம் செய்து வருகிறார்.
பெட்ரோல் விலை அதிகரித்ததால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி, அதை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று காலை, வழக்கம்போல் செய்தித்தாள் வினியோகம் செய்து விட்டு, பெருங்களத்துாரில் இருந்து மப்பேடு நோக்கி சென்றார். ஆலப்பாக்கம் அருகே சென்றபோது, திடீரென வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது.
சுதாரித்த அஸ்வின் குமார், வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கிய சிறிது நேரத்தில், வாகனம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. மளமளவென பரவிய தீயால், சிறிது நேரத்தில் வாகனம் முழுதும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
