புகார் மனு மீது நடவடிக்கை இல்லை: மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
புகார் மனு மீது நடவடிக்கை இல்லை: மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
UPDATED : ஜூன் 17, 2026 05:01 PM
ADDED : ஜூன் 17, 2026 05:00 PM
பாரிமுனை: குறைதீர் முகாமில் மாற்றுத்திறனாளிகள் கொடுக்கும் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. 'ஆவின்' பாலகம் நடத்துவதற்கான அரசாணை செயல்படுத்துவதில்லை உள்ளிட்டவற்றை கண்டித்து, மாற்றுத்திறனாளி சமூக நீதி இயக்கம் சார்பில், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சென்னை கலெக்டர் அலுவலகத்துக்குள் நடந்த இந்த போராட்டத்தில், மாற்றுத்திறனாளி சமூக நீதி இயக்கத்தின் தலைவர் சரவணன் தலைமையில், 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையறிந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகள், அவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். அவர்கள் சமரசம் ஆகாமல், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாற்றுத்திறனாளி சமூக நீதி இயக்கத்தினர் கூறியதாவது:
வாரந்தோறும், மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. தமிழ்நாடு மேம்பாட்டு வாரியம், மாநகராட்சி உட்பட 11 துறைகளில், மாற்றுத்திறனாளிகளால் அளிக்கப்படும் மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை.
மாற்றுத்திறனாளிகள், 50,000 ரூபாய் மானியத்துடன், ஆவின் பாலகத்தை நடத்துவதற்கான அரசாணை உள்ளது. ஆனால், இரண்டரை ஆண்டுகளாக செயல்படுத்தவில்லை.
கிண்டியில் உள்ள 'ஆவின்' பாலகத்திற்கும், வருவாய்த்துறை, ஆர்.டி.ஓ., அலுவலகம் என, பத்து முறைக்கு மேல் அலைக்கழித்தனர். இதனால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
கலெக்டருக்கு கையெழுத்து போடும் அதிகாரம் மட்டுமே உள்ளதால், குறைதீர் முகாம் எதற்காக நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
