யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள்: பேனர் வைத்து மக்கள் எச்சரிக்கை
யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள்: பேனர் வைத்து மக்கள் எச்சரிக்கை
ADDED : மார் 19, 2026 05:54 AM

சென்னை: கடந்த 35 ஆண்டுகளாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காததால், 'கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டோம்; நோட்டாவுக்கு தான் போடுவோம்' என, துரைப்பாக்கம் பகுதி மக்கள் பேனர் வைத்துள்ளனர்.
சோழிங்கநல்லுார் மண்டலம், 193வது வார்டு, அண்ணா நகர் 8வது தெரு, பல்லவன் தெருவில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த 35 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடி வருவதாகவும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் கூறி, 'எங்களுக்கு உதவாத கட்சியினர், எங்கள் பகுதிக்கு வராதீர்கள்' என, பேனர் வைத்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மின் இணைப்பு பெற்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை வைத்துள்ளோம். வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதி, ஒரு நபருக்கு சொந்தமானது எனக்கூறி, இடத்தை காலி செய்ய வலியுறுத்துகின்றனர்.
அதிகாரிகளும் அவர் களுக்கு சாதகமாகவே செயல் படுகின்றனர். பட்டா கேட்டு போராடி வருகிறோம்.தி.மு.க., - அ.தி.மு.க., அரசுகளால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை.
அதனால், சட்டசபை தேர்தலில் நோட்டாவுக்கு ஓட்டு போட உள்ளோம். அதை வலியுறுத்தி, கட்சிகளுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக பேனர் வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
