ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்ய ஆளில்லை; வேறு நிறுவன நபர்கள் வருவதால் மக்கள் குழப்பம்
ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்ய ஆளில்லை; வேறு நிறுவன நபர்கள் வருவதால் மக்கள் குழப்பம்
UPDATED : நவ 26, 2025 02:13 PM
ADDED : நவ 25, 2025 11:58 PM

நமது நிருபர்
இந்தியாவில் உணவு டெலிவரி நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளாக முன்னேறி வருகின்றன. ஆரம்ப காலத்தில் மெட்ரோ நகரங்களை மட்டுமே குறிவைத்து சேவை வழங்கிய உணவு டெலிவரி நிறுவனங்கள், தற்போது குக்கிராமம் வரை சேவை வழங்குகின்றன. குறிப்பாக, 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவிய பேரிடர் காலத்தில், உணவு டெலிவரி சேவைகளுக்கு மிக அதிகமான தேவை உருவானது.
பலர் வீட்டை விட்டு வெளியே செல்ல தயங்கினர். இதன் வாயிலாக 'ஸ்விக்கி, 'சொமாட்டோ' உள்ளிட்ட நிறுவனங்கள் மிகுந்த வளர்ச்சியை கண்டன. பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி நிறுவன செயலியில் உணவு ஆர்டர் செய்வது, 'இன்ஸ்டாமார்ட்' எனும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை அனுப்புவது போன்ற சேவைகள் வழங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புகார்
இந்நிலையில், ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர் செய்தால், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் எடுத்து வராமல், வேறு நிறுவனங்களை சார்ந்தவர்கள் டெலிவரி செய்வதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ராபிடோ உள்ளிட்ட 'பைக் டாக்ஸி' ஓட்டுநர்களே அதிகம் வினியோகத்திற்கு வருகின்றனர். இதனால், யார் உண்மையில் உணவு டெலிவரி செய்ய வருகின்றனர் என்ற குழப்பமும், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாக மாறி உள்ளது.
கூடுதல் கட்டணம்
பொதுவாக உணவு டெலிவரி செய்யும்போது வரும் நபர்களின் பெயர் செயலியில் காண்பிக்கும்.அவர்களும் அந்நிறுவன 'டீ ஷர்ட்' அணிந்து வருவர். நம் பெயரை உறுதி செய்து பார்சலை தந்துவிட்டு செல்வர். இதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் முன்பே செலுத்திவிடுவோம். ஆனால், சமீப நாட்களாக சம்பந்தமில்லாத புது நபர்கள் வருகின்றனர்.
வீட்டின் கீழே சென்று வாங்கும்போது, அவர்கள் நிறுவன, 'டீ ஷர்ட்' அணிந்திருப்பது இல்லை. அடுத்த நாள் ஆர்டர் செய்தபோதும் இப்படியே நடந்தது. இப்படி, சமீப நாட்களாக புதுப்புது நபர்கள் உணவு வினியோகம் செய்வதால், வீட்டில் தனியாக உள்ள பெண்கள், முதியவர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது, பிரபலமாக உள்ள ஸ்விக்கி நிறுவனம் போதிய ஆட்கள் இன்றி வேலை செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. உணவு பதிவுக்கு இஷ்டத்துக்கு கட்டணத்தை வசூலிக்கும் நிறுவனம், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கோட்டை விடக்கூடாது. எனவே, ஸ்விக்கி நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அழைப்பு துண்டிப்பு
எங்கள் மீதான புகார் என்றால், நிறுவனத்திடம் தெரிவித்து தீர்வு காணலாம். கடந்த சில மாதங்களாக, பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் வாயிலாக உணவு டெலிவரி செய்ய ஸ்விக்கி அனுமதித்துள்ளது. செல்லும் வழியில் கிடைக்கும் ஆர்டர்களை பெற்றுக்கொண்டு, அவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் முகவரிக்கு சென்று தருகின்றனர். அவர்கள் மீது வாடிக்கையாளர்கள் புகார் அளிக்க நினைத்தாலும், எளிதாக அது முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
