மூன்று மடங்கு உயர்ந்த மீன் விலை: ஏமாற்றமடைந்த அசைவ பிரியர்கள்
மூன்று மடங்கு உயர்ந்த மீன் விலை: ஏமாற்றமடைந்த அசைவ பிரியர்கள்
UPDATED : ஜூன் 14, 2026 07:04 PM
ADDED : ஜூன் 14, 2026 07:02 PM

காசிமேடு: காசிமேடில் கடந்த வாரங்களை போலவே, நேற்றும் மீன் விலை மூன்று மடங்கு உயர்வாக விற்பனையானதால், வழக்கம்போல அசைவ பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கடல் உயிரிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டிற்கான மீன்பிடி தடைக்காலம், கடந்த ஏப்., 15ம் தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை, 61 நாட்கள் அமலில் இருந்தது.
நேற்று நள்ளிரவு மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், காசிமேடில் விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், காசிமேடில் மீன் வாங்க ஏராளமான அசைவ பிரியர்கள் குவிந்தனர். 30க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன் வகைகள், பழைய மீன் ஏலக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
குறைந்த அளவில் மீன் விற்பனைக்கு வந்ததாலும், அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததாலும், மீன்விலை மூன்று மடங்கு உயர்ந்தது. இதனால் அசைவ பிரியர்கள் பலர், மீன்களை வாங்க பேரம் பேசியும் விலை குறைக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
