தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் !

டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் !

டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் !


ADDED : ஏப் 22, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 11:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:திருவண்ணாமலை அருகே, 15 வயது சிறுமிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக டி.ஜி.பி.,க்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த கல்பட்டு கிராமத்தில் உள்ள, அவரது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து, கடந்த 19ம் தேதி சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு தனியாக, இரு சக்கர வாகனத்தில் திரும்பினார். அப்போது, சீம்பலம் என்ற இடத்தில், எட்டு பேரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

இந்த சம்பவம், தமிழகம் முழுதும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு இச்சம்பவம் சாட்சி' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இன்று, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இச்சம்பவம் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை, தேசிய மகளிர் ஆணையம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை கேட்டு, டி.ஜி.பி.,க்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஒரு சிறுமி கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை, தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. சிறுமி மீதான இந்த கொடூர தாக்குதல், பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலைகளை எழுப்பியுள்ளது.

இதுபோன்ற ஈவிரக்கமற்ற குற்றங்களுக்கு எதிராக , வலுவான தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகும். சிறுமியருக்கு எதிரான வன்முறை என்பது பெரும் மனித உரிமை மீறல்.

சிறுமி மீதான மிருகத்தனமான செயலை , தேசிய மகளிர் ஆணையம் கண்டிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு உடனடி பொறுப்புக்கூறலும் கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டியது அவசியம்.

'பாரதிய நியாய சம்ஹிதா' மற்றும் ' போக்சோ ' சட்டத்தின் கீழ், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து, நியாயமான காலவரையறைக்குள் விசாரணை நடத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விரிவான மருத்துவ ஆலோசனை, மறுவாழ்வு, பாதுகாப்பு ஆதரவை, தமிழக டி.ஜி.பி., வழங்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஐந்து நாட்களுக்குள், டி.ஜி.பி., விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை போலீசார் திட்டவட்ட மறுப்பு சிறுமி விவகாரம் தொடர்பாக இதுவரை நடத்திய விசாரணை குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மாணவி, 19ம் தேதி இரவு, 8:00 மணி அளவில், கல்பட்டு கிராமத்திலிருந்து புறப்பட்டு, மீண்டும் சொந்த ஊரான பிள்ளையார் பாளையத்திற்கு மொபட்டில் சென்றுள்ளார். வழியில் வயலாத்துார் என்ற இடத்தில், எதிரே பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள், மாணவி சென்ற மொபட் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த கிராம மக்கள் அவர்களை மீட்டனர். இதில், யாருக்கும் பெரிய பாதிப்பு இல்லாததால், இரு தரப்பினரையும் அங்கிருந்து பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், மாணவிக்கு லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. மொபட்டின் ஹேண்ட் பிரேக் பழுதடைந்தது. இதனால், மாணவி மெதுவாக மொபட்டை இயக்கி கொண்டு சிறிது துாரம் சென்ற நிலையில், மாணவியின் காதலனை வரவழைத்து, காதலன் வந்த பைக்கை மாணவி ஓட்டி கொண்டு, மாணவி ஓட்டி சென்ற மொபட்டை காதலன் ஓட்டி கொண்டு, காஞ்சிபுரம் சென்றடைந்தனர். பின்னர், அங்கு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, மாணவியை அவரது வீட்டின் அருகே விட்டுவிட்டு காதலன் புறப்பட்டு சென்றுள்ளார். மாணவி வீட்டிற்கு தாமதமாக சென்றதாலும், உடலில் உள்ள காயத்தை பார்த்து பெற்றோர் கண்டித்ததாலும், மாணவி, தன்னை ஒரு கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாக தவறான தகவல் தெரிவித்துள்ளார். மேலும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள், மாணவியை பரிசோதனை செய்ததில், கூட்டு பலாத்காரம் செய்ததற்கான அறிகுறி தெரியவில்லை என, தெரிவித்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும், மாணவி எங்கெங்கு சென்றார் என்பதற்கான, 'சிசிடிவி வீடியோ' ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில், போலீசார் திட்டவட்டமாக கூட்டு பலாத்காரம் நடக்கவே இல்லை என, மறுக்கின்றனர். அதே நேரத்தில், 'உண்மை நிலவரம் குறித்து இன்னும் இரண்டு நாளில் விசாரணை முடித்து, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தெளிவாக கூறுகிறோம்' என, தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே விசாரணை நடத்திய, மூன்று வாலிபர்களை விடுவித்துவிட்டு, மற்றொரு வாலிபரை பிடித்து நேற்று விசாரணை நடத்தினர். போலீசார் திசை திருப்ப பொய்யான தகவல் கூறுகின்றனரா, உண்மையில் கூட்டு பலாத்காரம் நடக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us