கடற்கரையில் விதிமீறி கட்டடம் கட்டிய 24 பேருக்கு ‘நோட்டீஸ்’
கடற்கரையில் விதிமீறி கட்டடம் கட்டிய 24 பேருக்கு ‘நோட்டீஸ்’
ADDED : செப் 03, 2026 06:33 PM
நீலாங்கரை: நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி பகுதி கடற்கரைகளில், விதிமீறி கட்டிய 24 கட்டடங்களை காலி செய்யக்கோரி, அவற்றின் உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி ‘நோட்டீஸ்’ வழங்கி உள்ளது.
கடற்கரை அருகில் அனுமதியற்ற கட்டடங்கள் மற்றும் தொழில்கள் வராமல் ஒழுங்குபடுத்துவது, கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை குழுமத்தின் பணி.
இந்த குழுமம், சோழிங்கநல்லுார் மண்டலம், 192, 194, 197வது வார்டு, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய கடற்கரை பகுதிகளில், விதிமீறி கட்டிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து மாநகராட்சி, 2018ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் துாரத்தில், 798 கட்டடங்கள் விதிமீற கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதில் 440 கட்டட உரிமையாளர்கள், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கும்படி, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையிடம் மனு அளித்தனர். மேலும், அவர்கள் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்திலும் உள்ளது.
இந்நிலையில், விதிமீறி கட்டிய 24 கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் என, நகர்புற வளர்ச்சி துறை அறிவுறுத்தியது. இதையடுத்து, அக்கட்டட உரிமையாளர்களை காலி செய்ய, மாநகராட்சி தற்போது ‘நோட்டீஸ்’ வழங்கியுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகர்புற வளர்ச்சி துறையில் உள்ள மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடக்கிறது. முதற்கட்டமாக தள்ளுபடி செய்யப்பட்ட 24 கட்டட உரிமையாளர்களுக்கு, காலி செய்ய நோட்டீஸ் வழங்கி உள்ளோம். இன்னும் பலரின் மனுக்கள் தள்ளுபடியாக வாய்ப்புள்ளது. அவர்களுக்கும் அடுத்தடுத்து நோட்டீஸ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
