/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நுாம்பல் பிரதான சாலை சீரமைக்க 'கெடு'
/
நுாம்பல் பிரதான சாலை சீரமைக்க 'கெடு'
ADDED : ஜூன் 18, 2025 12:14 AM

திருவேற்காடு, திருவேற்காடு நுாம்பல் பிரதான சாலையை, வரும் 23ம் தேதிக்குள் சீரமைக்காவிட்டால், வியாபாரிகள், லாரி உரிமையாளர்கள் இணைந்து சாலையை சீரமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட நுாம்பல் பிரதான சாலை, 1.5 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை ஒட்டி, 20,000க்கும் மேற்பட்ட வீடுகள், பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த சாலையில் தினமும், 15,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, ஆறு ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால், கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் கவிழ்ந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஊர்ந்து செல்கின்றன.
தொடர் புகாரை அடுத்து, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 1.20 கோடி ரூபாயில சாலை சீரமைக்கப்படும் என, கடந்த ஆண்டு நகராட்சி அறிவித்தது.
ஆனால், இதுவரை சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த வாரம் பெய்த மழையின் போது, சாலையில் வெள்ளம் தேங்கி குளமாக மாறியது. வானகங்கள் தட்டுத்தடுமாறி சென்றன. நிலைமை மோசமானதால், மோட்டார் வைத்து மழைநீரை நகராட்சி வெளியேற்றியது.
தற்போது, மழையின்போது வெள்ளம் தேங்கி நிற்காமல் இருக்க குழாய் பதிக்கும் பணியில் நகராட்சி ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் 23ம் தேதிக்குள் சாலையை சீரமைக்க வேண்டும் என்று 'கெடு' விதித்து, மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்ச்சி அமைப்பு, கடந்த வாரம் நகராட்சிக்கு கடிதம் அளித்தது.
அதற்குள் சாலையை சீரமைக்காவிட்டால், வியாபாரிகள், லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் இணைந்து சாலையை சீரமைக்க முடிவெடுத்துள்ளது.
***