/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் பிராட்வேயில் அகற்றம்
/
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் பிராட்வேயில் அகற்றம்
ADDED : நவ 22, 2024 12:16 AM
பிராட்வே, நஆக்கிரமிப்பில் குடியிருப்போர் வீடுகளை காலி செய்ய மறுத்ததால், போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
ராயபுரம் மண்டலம், 56 வார்டு, பிராட்வே - பி.ஆர்., கார்டன் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. அந்த வீடுகள் பழுதானதால், அவற்றை இடித்து விட்டு, ஒன்பது மாடியில், பார்க்கிங், லிப்ட் வசதியுடன் கூடிய, 450 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது.
அதற்காக, அங்கு குடியிருந்தவர்களுக்கு தற்காலிக ஆணை மற்றும் வாடகை பணம், 24,000 ரூபாய் வழங்கி, காலி செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் வீடுகளை காலி செய்துள்ளனர். குடியிருப்புகளை ஒட்டி ஆக்கிரமிப்பில் குடியிருந்த, 30க்கும் மேற்பட்டோர் காலி செய்யாமல், எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், டிச., 17க்குள், ஆக்கிரமிப்பு கட்டடங்களை காலி செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை, மண்டல அதிகாரி பரிதாபானு, செயற்பொறியாளர் லோகேஸ்வரன் தலைமையிலான ஊழியர்கள், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன், ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றச் சென்றனர்.
அப்பகுதி மக்கள், கட்டடங்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். துறைமுகம் உதவி கமிஷனர் ராஜசேகர் தலைமையில், 50 க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பெண் ஒருவர் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்து, தீக்குளிக்கப் போவதாக மிரட்டினர்.
காவல் துறையினர், அந்த பெண்ணை சமாதானம் செய்து, அழைத்துச் சென்றனர். பின், போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.