/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.100 வாடகையில் ஆபீஸ் சி.எம்.டி.ஏ., அறிவிப்பு
/
ரூ.100 வாடகையில் ஆபீஸ் சி.எம்.டி.ஏ., அறிவிப்பு
ADDED : நவ 05, 2024 12:36 AM
சென்னை, 'கொளத்துாரில் நேற்று திறக்கப்பட்ட முதல்வர் படைப்பகத்தில், 'கோ ஒர்க்கிங் ஸ்பேஸ்' எனப்படும், பகிர்ந்த பணியிட அலுவலகத்தை, 100 ரூபாய் நாள் வாடகையில் பயன்படுத்தலாம்' என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
சென்னையில் பொது நுாலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கட்டணம் செலுத்தி பயன்படுத்துவதற்கான பகிர்ந்த பணியிடங்களை, சி.எம்.டி.ஏ., உருவாக்கி வருகிறது.
இந்த வகையில், சென்னை கொளத்துாரில் முதல்வர் படைப்பகம் என்ற வளாகம், நேற்று திறக்கப்பட்டது.
இதில் கல்வி மையம், பகிர்ந்த பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்துவதற்கான கட்டண விவரங்களை, சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது.
இங்குள்ள கல்வி மையத்தை, போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் பயன்படுத்தலாம். ஒரு நபருக்கு, இரண்டரை மணி நேரத்திற்கு, 5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
பகிர்ந்த பணியிடங்களை பயன்படுத்த ஒரு நபருக்கு அரை நாளுக்கு, 50 ரூபாய், முழு நாளுக்கு 100 ரூபாய், மாதம் முழுதும் பயன்படுத்த, 2,500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இங்குள்ள கூட்ட அரங்கை பயன்படுத்த, நான்கு இருக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு, 150 ரூபாய், ஆறு இருக்கைகளுக்கு, 250 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ள, https://gccservices.chennaicorporation.gov.in/muthalvarpadaippagam என்ற இணையதளத்தை அணுகலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்து உள்ளது.