வலையில் சிக்கிய பீரங்கி குண்டு செயலிழக்க செய்த அதிகாரிகள்
வலையில் சிக்கிய பீரங்கி குண்டு செயலிழக்க செய்த அதிகாரிகள்
ADDED : மே 30, 2026 01:35 AM

பொன்னேரி: பழவேற்காடில் மீனவர் வலையில் சிக்கிய பீரங்கி குண்டை, போலீசார் செயலிழக்கச் செய்தனர்.
திருவள்ளூர், பழவேற்காடு பசியாவரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த 18ம் தேதி மீன்பிடிக்க சென்ற போது, மீன்களுடன் மர்ம பொருள் ஒன்று சிக்கியது. அதை திருப்பாலை வனம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் ஆய்வில் பீரங்கிகளுக்கு பயன்படுத்தும் வெடிகுண்டு என தெரிய வந்தது. அதை பாதுகாப்பான இடத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, வெடிகுண்டை செயலிழக்க வைப்பதற்கான உத்தரவு பெறப்பட்டது.
அதையடுத்து, நேற்று ஆவடி வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர் குழுவினர், பீரங்கி குண்டை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, 'டெட்டனேட்டர்' மூலம் இணைத்து, மண் போட்டு மூடினர்.
அதன்மீது, மணல் மூட்டைகள் அமைத்து பலப்படுத்தப்பட்டன.
பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில், வெடிகுண்டு நிபுணர் குழு, 500 மீ., தொலைவில் இருந்தபடி, மண்ணில் புதைக்கப்பட்ட வெடிகுண்டை வெடிக்க வைத்து, செயலிழக்கச் செய்தனர்.
அப்போது, பயங்கர சத்தத்துடன் வெடித்து, கரும்புகை வெளியேறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
