/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் ரூ.20 கோடி நிலத்தை மீட்பதில் அலட்சியம்
/
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் ரூ.20 கோடி நிலத்தை மீட்பதில் அலட்சியம்
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் ரூ.20 கோடி நிலத்தை மீட்பதில் அலட்சியம்
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் ரூ.20 கோடி நிலத்தை மீட்பதில் அலட்சியம்
ADDED : அக் 13, 2025 05:05 AM

புழுதிவாக்கம்: புழுதிவாக்கத்தில், தனியார் பெயரிலுள்ள பட்டா நிலம், பொது பயன்பாட்டிற்கான நிலம் தான் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும், பட்டாவை ரத்து செய்வதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதால், நிலத்தை மீட்பதில் இழுபறி நீடிக்கிறது.
பெருங்குடி மண்டலம், 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்குள்ள சாரதி நகரில், 1,000 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிக்கென ஒதுக்கப்பட்ட ஓ.எஸ்.ஆர்., எனும் பொது பயன்பாட்டிற்கான, சர்வே எண்: 225ல், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பூங்கா நிலத்தை, தனியார் ஆக்கிரமித்துள்ளார்.
இது, பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட பூங்கா நிலம் எனவும், இதை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், சென்னை மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஆணை பிறப்பித்தார்.
இந்நிலையில், இவ்விடம் கடந்த 2014ம் ஆண்டு முதல் தான் அனுபவித்து வரும், எனக்கு சொந்தமான நிலம் என்பதால், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியின் ஆணையை ரத்து செய்து, நிலத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டுமென, உயர் நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பாளர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, இது பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலம் தான் என, மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியின் ஆணையை உறுதி செய்து, வழக்கை கடந்த மே மாதம் ரத்து செய்தார்.
எனவே, இந்த வழக்கின்படி, குறிப்பிட்ட இடத்தின் பட்டாவை ரத்து செய்து, மாநகராட்சியிடம் ஒப்படைக்கும்படி, பெருங்குடி மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் சோழிங்கநல்லுார் தாசில்தாருக்கு அறிவுறுத்தல் மனு அனுப்பினார்.
ஆனால், ஐந்து மாதங்களாகியும், சோழிங்கநல்லுார் தாசில்தார் அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளார்.
எனவே, பொது பயன்பாட்டிற்கான நிலத்தை மீட்டு, உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அவர்களின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என, அப்பகுதி குடியிருப்பு நலச்சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.