பழமையான கழிவுநீர் குழாய் உடைப்பு வீடுகளுக்குள் கழிவுநீர் தேங்கியதால் அவதி
பழமையான கழிவுநீர் குழாய் உடைப்பு வீடுகளுக்குள் கழிவுநீர் தேங்கியதால் அவதி
UPDATED : நவ 23, 2026 06:14 PM
ADDED : நவ 23, 2026 06:14 PM

மேற்கு மாம்பலம்: மேற்கு மாம்பலம், சத்தியபுரி தெருவில், 25 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் செல்வதில் தடைபட்டு, பின்னோக்கி சென்று குடியிருப்புகளில் தேங்குவதை, குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, அந்த குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம் சத்தியபுரி தெருவில், குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற வழியின்றி, வீடுகளுக்குள் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால், பகுதிமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். தவிர, இயந்திர நுழைவு மூடியும் உடைந்திருந்தது.
இந்நிலையில், சத்தியபுரி தெருவிற்கு நேற்று சென்ற குடிநீர் வாரிய ஊழியர்கள், பாதாள சாக்கடை இயந்திர நுழைவு மூடி உள்வாங்கிய பகுதியில், பள்ளம் தோண்டி ஆய்வு செய்தனர்.
அப்போது, 25 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட கழிவுநீர் குழாயில் உடைப்பு இருப்பதும், குழாயினுள் சேறும் சகதியும் தேங்கி அடைப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனாலே, குழாயில் கழிவுநீர் செல்வது தடைபட்டு, வீடுகளுக்கு திரும்பும் நிலை இருந்தது.
இதையடுத்து, சேதமடைந்த குழாயை சீரமைத்து, அடைப்புகளை அகற்றும் பணியில், குடிநீர் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
