செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் நகரம் திட்ட வரைவு பணி தொடக்கம்
செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் நகரம் திட்ட வரைவு பணி தொடக்கம்
UPDATED : நவ 19, 2026 12:00 AM
ADDED : நவ 18, 2026 11:50 PM
சென்னை: செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் நகரம் அமைப்பதற்கு, கட்டட வடிவமைப்பு மற்றும் திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காக, ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
செம்மஞ்சேரியில், தனியார் கல்லுாரி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில், விளையாட்டு நகரம் அமைக்க, முந்தைய தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இதற்காக, 124 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்தாரர் தேர்வு மேற்கொள்ளப்பட்டது. த.வெ.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், அந்த ‘டெண்டர்’ ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தனியார் கல்லுாரிக்கு ஆதரவாக டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
ஆனால், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், இந்த விளையாட்டு நகரத்தை மேம்படுத்தி கட்டுமானம் செய்வதற்காகவே ரத்து செய்யப்பட்டதாக, த.வெ.க.,வைச் சேர்ந்த விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். அதன்படி, செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் விளையாட்டு நகரம் அமைப்பதற்கு, கட்டுமான வடிவமைப்பை வழங்குவதற்கான ஆலோசகரை தேர்வு செய்யும் பணிகளை பொதுப்பணி துறை தொடங்கியுள்ளது.
ஆலோசனை நிறுவனம் வாயிலாக கட்டட வடிவமைப்பு மட்டுமின்றி, திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்படவுள்ளது. அதன்படி, டெண்டர் கோரப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
