/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆம்னி பஸ் டயர் கழன்று ஓடி ஆட்டோவில் மோதி விபத்து
/
ஆம்னி பஸ் டயர் கழன்று ஓடி ஆட்டோவில் மோதி விபத்து
ADDED : பிப் 06, 2024 11:56 PM

வடபழனி:ஆம்னி பேருந்தின் டயர் கழன்று ஓடி ஆட்டோவில் மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுனர் காயமடைந்தார்.
தஞ்சாவூரில் இருந்து இ.சி.ஆர்., எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக, கோயம்பேடு நோக்கி ஆம்னி பேருந்து வந்தது. இந்த பேருந்தை, தஞ்சாவூரைச் சேர்ந்த ஜான் கென்னடி, 57, என்பவர் ஓட்டி வந்தார்.
சென்னை, வடபழனி 100 அடி சாலையில், அம்பிகா எம்பயர் ஹோட்டல் அருகே வந்த போது, ஆம்னி பேருந்தின் பின்னால் உள்ள இடதுபக்க அச்சு உடைந்துள்ளது.
இதனால், டயர் தனியாக கழன்று சாலையில் ஓடி, அங்கிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதிஉள்ளது.
இதில், ஆட்டோ ஓட்டுனரான, வடபழனி, பக்தவச்சலம் காலனி முதலாவது தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன், 52, என்பவரது இரு கால் மூட்டுகளிலும் காயம் ஏற்பட்டது.
மேலும், டயர் மோதிய வேகத்தில், ஆட்டோவின் இடதுபக்கம் முழுதும் சேதமடைந்தது. தகவலின்படி வந்த பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார், சாலை நடுவே நின்ற ஆம்னி பேருந்தை, 'கிரேன்' உதவியுடன் அகற்றினர். இது குறித்து, மேலும் விசாரிக்கின்றனர்.
இதனால், வடபழனி 100 அடி சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

