/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினமும் தொடரும் 6 மணி நேரம் மின் தடை அதிகாரிகள் அலட்சியத்தால் ஓ.எம்.ஆரில் அவதி
/
தினமும் தொடரும் 6 மணி நேரம் மின் தடை அதிகாரிகள் அலட்சியத்தால் ஓ.எம்.ஆரில் அவதி
தினமும் தொடரும் 6 மணி நேரம் மின் தடை அதிகாரிகள் அலட்சியத்தால் ஓ.எம்.ஆரில் அவதி
தினமும் தொடரும் 6 மணி நேரம் மின் தடை அதிகாரிகள் அலட்சியத்தால் ஓ.எம்.ஆரில் அவதி
ADDED : ஜூன் 06, 2025 12:16 AM
துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், 195, 196வது வார்டு, ஓ.எம்.ஆர்., ஒக்கியம்பேட்டை, மேட்டுக்குப்பம், கண்ணகி நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதியில், 500க்கும் மேற்பட்ட தெருக்களில், 48,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதில், 30 சதவீதம் ஐ.டி., மற்றும் வணிக நிறுவனங்களின் இணைப்பு. இந்த மின் வினியோகம், பெருங்குடி தெற்கு மற்றும் கண்ணகி நகர் துணை மின் நிலையங்களில் இருந்து வழங்கப்படுகிறது.
இங்கு, ஒரு மாதமாக, தினமும் 4 முதல் 6 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது. வடிகால் மற்றும் கழிவுநீர் இணைப்புக்காக பள்ளம் தோண்டும்போது ஏற்படும் கேபிள் பழுதால் மின் தடை ஆகிறது.
கேபிள் பழுதை சரி செய்ய, வடிகால், கழிவுநீர் பணி ஒப்பந்த நிறுவனங்கள், கேபிள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் பணிக்கான ஊதியம் வழங்குகிறது. இருந்தும், கேபிள் பழுதை உடனுக்குடன் சரி செய்வதில்லை என்ற புகார் எழுகிறது.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
ஐந்து மாதமாக, வடிகால், கழிவுநீர் இணைப்பு பணி நடக்கிறது. நான்கு மாதமாக ஏற்பட்ட கேபிள் பழுது உடனுக்குடன் சரி செய்யப்பட்டது.
ஒரு மாதமாக, மின் வாரிய பொறியாளர்கள், பராமரிப்பு பணி ஊழியர்கள் இடையே, நிர்வாக ரீதியாக பனிப்போர் நடப்பதால், கேபிள் பழுதை உடனுக்குடன் சரி செய்வதில்லை.
ஒரு மணி நேரத்தில் சரி செய்ய வேண்டிய பணியை, அரை நாள் முதல் ஒரு நாள் வரை இழுத்தடிக்கின்றனர். இதனால், தினமும் 6 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது.
இரவு நேரத்தில் ஏற்பட்டால், மறுநாள் காலை வரை நீடிக்கிறது. நிர்வாக குளறுபடியை நீக்கி, சீரான மின் வினியோகம் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மின்வாரிய உயர் அதிகாரி கூறியதாவது:
அதிக மின் இணைப்பு உள்ளதால், போர்மேன், லைன்மேன் என, 30 ஊழியர்கள் இருக்க வேண்டும். இப்போது, எட்டு பேர் தான் உள்ளனர்.
இதனால், கேபிள் பழுதை சரி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் மின்தடை நேரம் நீடிக்கிறது.
கேபிள் பழுதை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாதமாக நீடிக்கும் பொறியாளர், ஊழியர்கள் பிரச்னை குறித்து விசாரித்து சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.