ADDED : செப் 14, 2026 06:02 PM
புழல்: தானாக பின்னால் நகர்ந்த லாரியில் சிக்கி, ராஜஸ்தானைச் சேர்ந்த தாராராம் என்ற 46 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புழல், காந்தி சாலையில் தனியாருக்கு சொந்தமான கெமிக்கல் கிடங்கு உள்ளது. இதில், 10க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை கெமிக்கல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று, கிடங்கிற்கு வந்துள்ளது. அதன் ஓட்டுநர், லாரியில் இருந்து இறங்கி, நுழைவாயில் முன்பக்க கதவை திறக்க சென்றார்.
அப்போது, திடீரென தானாக பின்னோக்கி லாரி நகர்ந்துள்ளது. அங்கு நின்றிருந்த ராஜஸ்தான் மாநிலம் பாலை மாவட்டத்தைச் சேர்ந்த தாராராம் என்பவர் மீது, லாரி மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது, லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்த புழல் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
