/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொடரும் வாகன நெரிசல் கொட்டிவாக்கத்தில் திணறல்
/
தொடரும் வாகன நெரிசல் கொட்டிவாக்கத்தில் திணறல்
ADDED : ஜன 30, 2024 12:09 AM

சென்னை, சென்னையின் முக்கிய சாலையாக, இ.சி.ஆர்., உள்ளது. திருவான்மியூர் முதல் அக்கரை வரை, நான்குவழிச் சாலையை ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி நடக்கிறது.
இதில், கொட்டிவாக்கம், பாலவாக்கத்தில் குறிப்பிட்ட பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கம் செய்தும், சில இடங்களில் ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.
கொட்டிவாக்கத்தில் 'யு-டர்ன்' செய்யும் இடத்தை ஒட்டி, ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. தினமும் மாலை நேரத்தில், அதிக வாகனங்கள் கடை முன் நிறுத்தப்படும்.
இதனால், 'யு-டர்ன்' செய்யும் வாகனங்களுக்கு போதிய இடம் கிடைக்காமல், மெதுவாக செல்ல வேண்டி உள்ளது. இதனால், சாலையின் இரு திசையிலும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இதர பகுதியில், அவசரம் கருதி சில நிமிடம் சாலையோரம் வாகனம் நிறுத்தினால் வழக்கு பதியும் போலீசார், டாஸ்மாக் கடை வாசலில் மணிக்கணக்கில் நிறுத்திச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
நெரிசலால், மருத்துவமனைக்கு கூட அவசரமாக செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை தடுக்க, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'டாஸ்மாக்' கடை முன் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.