/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் திருத்திய டெண்டருக்கு உத்தரவு
/
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் திருத்திய டெண்டருக்கு உத்தரவு
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் திருத்திய டெண்டருக்கு உத்தரவு
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் திருத்திய டெண்டருக்கு உத்தரவு
ADDED : செப் 28, 2024 12:43 AM
சென்னை, தீவுத்திடலில், பட்டாசு கடைகள் அமைப்பதற்கான, 'டெண்டர்' நிபந்தனைகளை எதிர்த்த வழக்கை முடித்துவைத்த சென்னை உயர் நீதிமன்றம், திருத்திய டெண்டரை வெளியிட உத்தரவிட்டுள்ளது. சென்னை, பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்க நிர்வாக தலைவர் நடராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் அக்., 18 முதல் நவ., 1ம் தேதி வரை பட்டாசு கடைகள் அமைத்து விற்பனை செய்வதற்கான, 'டெண்டர்', செப்., 13ல் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பாணையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனரே, டெண்டர் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பார்.
குறிப்பாக, டெண்டரை மாற்றியமைக்கவும், விண்ணப்பத்தை எந்த காரணமும் தெரிவிக்காமல் ஏற்கவும், நிராகரிக்கவும் வகையில் நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன. சட்டத்துக்கு எதிராக வெளியிடப்பட்ட இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், மனுதாரர் தரப்பில் எதிர்க்கும் டெண்டரில் குறிப்பிடப்பட்ட அந்த நிபந்தனைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என, தெரிவிக்கப்பட்டது.
இதைப்பதிவு செய்த நீதிபதி, தீவுத்திடலில் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தியமைக்கப்பட்ட டெண்டரை வெளியிட உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.