/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விண்ணப்பிக்காதவருக்கு ரூ.15 லட்சம் கடன் வங்கி அபகரித்ததை திரும்ப வழங்க உத்தரவு
/
விண்ணப்பிக்காதவருக்கு ரூ.15 லட்சம் கடன் வங்கி அபகரித்ததை திரும்ப வழங்க உத்தரவு
விண்ணப்பிக்காதவருக்கு ரூ.15 லட்சம் கடன் வங்கி அபகரித்ததை திரும்ப வழங்க உத்தரவு
விண்ணப்பிக்காதவருக்கு ரூ.15 லட்சம் கடன் வங்கி அபகரித்ததை திரும்ப வழங்க உத்தரவு
ADDED : பிப் 12, 2025 12:41 AM
சென்னை, தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பிக்காத நிலையில், வங்கி நிர்வாகம் தானாகவே கடன் அனுமதித்தது சேவை குறைபாடு என தெரிவித்த சென்னை நுகர்வோர் நீதிமன்றம், 15 லட்சம் ரூபாய் கடனை ரத்து செய்தும், மோசடி கும்பல் அபகரித்த 4.87 லட்சம் ரூபாயை திரும்ப வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் மதுமிதா. இவர், சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் பெசன்ட் நகர் கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது. என் மொபைல் எண்ணுக்கு, 2023 ஜூலை 21ல் அழைப்பு வந்தது.
மறுமுனையில் பேசியவர், மும்பை சைபர் கிரைம் போலீசில் இருந்து பேசுவதாகவும், நான் அனுப்பிய பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல், கடன் மோசடி போன்ற பல்வேறு குற்றச்செயல்களில், என் ஆதார் எண் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், ஆதார் எண் வாயிலாக பல்வேறு வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதால், இதன் வாயிலாக சட்ட விரோதமான பண பரிவர்த்தனை எதுவும் நடந்துள்ளதா என, பார்க்கும்படியும் கூறினர்.
என் வங்கி கணக்கு விபரங்களை கேட்ட அந்த நபர், வங்கி கணக்கில் இருந்து, 19,91,687 ரூபாயை, வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றினர். இந்த பணம் திரும்ப அனுப்பப்படும் என கூறி, மொபைல் அழைப்பை துண்டித்தனர். சிறிது நேரத்துக்கு பின் தான் மோசடி கும்பல், என்னை ஏமாற்றியது தெரியவந்தது.
என் வங்கி கணக்கில் 5,81,366 மட்டுமே இருந்தது. ஆனால், நான் தனி நபர் கடன் கேட்டு விண்ணப்பித்ததாகக் கூறி, வங்கி நிர்வாகம் 15 லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைத்திருப்பதும், அந்த பணத்தையும் சேர்த்து, அந்த கும்பல் அபகரித்ததும் தெரியவந்தது.
மோசடி குறித்து வங்கி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், மோசடி கும்பலின் வங்கி கணக்கை முடக்குவதற்கோ அல்லது பணத்தை திரும்ப பெற்றுத் தரவோ நடவடிக்கை எடுக்கவில்லை. மோசடி கும்பல் அபகரித்த பணத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும். சேவை குறைபாடுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரித்த, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பிக்காத நிலையில், வங்கி நிர்வாகம் தானாகவே கடன் அனுமதித்தது சேவை குறைபாடு. எனவே, மனுதாரருக்கு அனுமதிக்கப்பட்ட 15,04,101 ரூபாய் கடன் ரத்து செய்யப்படுகிறது.
மோசடி கும்பலின் வங்கி கணக்கு விபரம் தெரிந்த போதும், பணத்தை திரும்ப பெற்று தருவதற்கு வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனுதாரரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் அபகரித்த 4,87,586 ரூபாயை மனுதாரருக்கு திரும்ப வழங்க வேண்டும்.
சேவை குறைபாடு, மன உளைச்சலுக்காக இரண்டு லட்சம் ரூபாய், வழக்கு செலவுக்கு 10 ஆயிரம் ரூபாய் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.