தீய சக்தி தி.மு.க.,வுடன்தான் எங்களுக்கு போட்டி: வளர்மதி
தீய சக்தி தி.மு.க.,வுடன்தான் எங்களுக்கு போட்டி: வளர்மதி
ADDED : ஏப் 02, 2026 04:57 PM

சென்னை: ''தீய சக்தியான தி.மு.க.,வுக்கும், எங்களுக்கும் தான் போட்டியே,'' என, தேர்தல் பிரசாரத்தில், ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி பேசினார்.
ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி, சூளைமேடு நெடுஞ்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன், பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் சென்றனர்.
அப்போது ஒரு மூதாட்டி, 'பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, வளர்மதி பேசியதாவது:
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், தி.மு.க., ஆட்சியில் முடக்கப்பட்டன. மீண்டும் நம் ஆட்சி அமைந்ததும், முடக்கப்பட்ட திட்டங்கள் மட்டுமின்றி, தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களையும், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பழனிசாமி செயல்படுத்துவார்.
தீய சக்தியான தி.மு.க.,வை எதிர்த்து தான் எம்.ஜி.ஆர்., கட்சியை துவங்கினார். தற்போதும் எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க,தான்; அவர்களை எதிர்த்து தான் போட்டியிடுகிறோம். மற்ற கட்சிகளை பற்றி எல்லாம் கவலை இல்லை.
ஆயிரம்விளக்கு தொகுதியில் சாலைகள் சரியாக அமைக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் இந்த தொகுதிக்கு, ஏராளமான வசதிகள் செய்து தரப்பட்டன. கஞ்சா புழக்கம் பெருகியுள்ளதால், தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
