சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் வெளியாட்கள் நுழைய தடை
சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் வெளியாட்கள் நுழைய தடை
ADDED : மே 29, 2026 02:09 AM

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில், உரிய அனுமதி இன்றி வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் ராகுல்நாத் பிறப்பித்துள்ள உத்தரவு:
சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் பார்வையாளர்கள், கட்டட அனுமதி விண்ணப்பதாரர்கள் என்ற பெயரில், வெளியாட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், குறிப்பிட்ட சில பிரிவுகளில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, அலுவலக வளாகத்திற்குள் வெளியாட்கள் வருகையை முறைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதற்காக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட உள்ளன.
சி.எம்.டி.ஏ., அலுவலகத்துக்கு வரும் பார்வையாளர்கள் உரிய நுழைவு பாஸ் பெறுவது கட்டாயம்
அலுவலக நாட்களில், மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி
ஒவ்வொரு பிரிவுக்குள் செல்லும்போதும் நுழைவு அனுமதி சீட்டை பதிவு செய்வது கட்டாயம். இதற்கான பதிவேடை பராமரிக்க வேண்டும்
நுழைவு அனுமதி சீட்டு இல்லாத வெளியாட்கள் அலுவலகத்துக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. இவ்வாறு யாராவது வந்தால் அவர்கள், பாதுகாவலர்கள் வாயிலாக உடனடியாக வெளியேற்றப்படுவர்
விடுமுறை நாட்களில் அலுவலகத்துக்கு வரும் பணியாளர்கள், உரிய மேலதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும்
அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டையுடன் இருப்பது கட்டாயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? கடந்த ஆட்சிக்காலத்தில், ஆன்லைன் முறையில் கட்டட அனுமதி திட்டம் தொடங்கப்பட்ட போது, வெளியாட்கள் நுழைவு தடை செய்யப்பட்டது.
'இ - மெயில், வாட்ஸாப்' வாயிலாக மக்கள் முன் அனுமதி பெற்றே, உள்ளே வர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்மையால், இத்திட்டம் வழக்கொழிந்து போனது. தற்போது வந்துள்ள உறுப்பினர் செயலர், புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
