/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதுப்பொலிவு பெறும் பாடி மேம்பாலம்
/
புதுப்பொலிவு பெறும் பாடி மேம்பாலம்
ADDED : ஜூலை 10, 2025 12:16 AM

வில்லிவாக்கம்,
வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தில் பல்வேறு வசதிகளுடன் அழகுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
அண்ணா நகர் மண்டலத்தில் பாடி, வில்லிவாக்கம், கொரட்டூர் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களை இணைக்கும் பகுதியாக, பாடி மேம்பாலம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள இம்மேம்பாலத்தால், போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
இந்நிலையில், கிண்டியில் மேம்பாலம் உள்ளதுபோல், பல்வித வசதிகளுடன் பாடி மேம்பாலத்தையும் அழகுப்படுத்த, நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
அதற்கான பணிகளை, 11.2 கோடி ரூபாய் மதிப்பில், சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
பாடி மற்றும் வில்லிவாக்கம் மேம்பால பாதையில், 11.2 கோடியில் அழகுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
சரவணா ஸ்டோர் செல்லும் பாடி மேம்பால பாதையில் மக்கள் கூடுவதற்காக இடம், நிழலுக்காக பசுமை நிலப்பரப்பு, சாய்வுப் பாதைகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.
அதேபோல், வில்லிவாக்கம் பாதையில், வாகனங்கள் நிறுத்தும் வசதி, பல்வேறு வகையான மரங்கள் மற்றும் பூச்செடிகள் அமைக்கப்படுகின்றன. தவிர, மேம்பால துாண்களில் வண்ணமயமான ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
வில்லிவாக்கத்தில் ஏற்கனவே, வண்ண மீன்கள் வர்த்தக மையம், பசுமை பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வரும் நிலையில், மேம்பால பூங்கா வசதியும் மக்களுக்கு கூடுதல் பொழுதுபோக்கு அம்சமாக அமையும். இப்பணிகள், இரண்டு மாதங்களில் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.