ADDED : ஆக 27, 2025 12:17 AM
அடையாறு காதலியை பார்க்க சென்ற ஓவியர், விபத்தில் சிக்கி பலியானார்.
திருவான்மியூர், பாரதி நகரை சேர்ந்தவர் ரித்விக்ராய், 24. ஓவியர். இவரது சகோதரிக்கு, நேற்று முன்தினம் இரவு பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்.
இவரது காதலி கோட்டூர்புரத்தில் உள்ளார். இரவு 11:30 மணிக்கு, காதலியை அழைத்து வர, 'அப்பாச்சி' இருசக்கர வாகனத்தில் கோட்டூர்புரம் நோக்கி புறப்பட்டார்.
அடையாறு எல்.பி., சாலை, தொலைத்தொடர்பு அலுவலகம் சிக்னலில், ரமேஷ், 55, என்பவர் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, ரித்விக்ராய் சென்ற பைக், ரமேஷ் சைக்கிள் மற்றும் சாலை மைய தடுப்பில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரித்விக்ராய், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியானார். பலத்த காயம் அடைந்த ரமேஷ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
