UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 05:44 PM
சென்னை: பெரும்பாக்கத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அங்குள்ள பாதுகாக்கப்பட்ட பெருங்கற்கால நினைவு சின்னங்கள் சேதமடைவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்தில், 157 ஏக்கர் பரப்பளவில், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் புதைக்கப்பட்ட, பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளன.
இதனால் இந்த பகுதி, பாதுகாக்கப்பட்ட தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக, மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அந்த இடத்தை ஒட்டியே, காப்புக்காடும் உள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில், பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தால், குப்பை மற்றும் கட்டடக் கழிவு கொட்டி வந்தது. மேலும், குப்பையையும் எரித்து வந்தது. அந்த பகுதியில் குப்பை கொட்டவோ, எரிக்கவோ கூடாது என, மத்திய தொல்லியல் துறையின் சார்பில், எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம், தேசிய பசுமை தீர்ப்பாயமும், தொல்லியல் முக்கியத்துவம் உள்ள அப்பகுதியில் குப்பை கொட்ட தடை விதித்தது.
ஆனாலும், பெரும்பாக்கத்தில் தினமும் உருவாகும் 40 டன் குப்பையை, அப்பகுதியிலேயே தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால், தொல்லியல் துறை அதிகாரிகள் அப்பகுதியை நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
