/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழிநெடுக டன் கணக்கில் குப்பை கழிவு: 'வரவேற்கிறது' பள்ளிக்குப்பம் சாலை
/
வழிநெடுக டன் கணக்கில் குப்பை கழிவு: 'வரவேற்கிறது' பள்ளிக்குப்பம் சாலை
வழிநெடுக டன் கணக்கில் குப்பை கழிவு: 'வரவேற்கிறது' பள்ளிக்குப்பம் சாலை
வழிநெடுக டன் கணக்கில் குப்பை கழிவு: 'வரவேற்கிறது' பள்ளிக்குப்பம் சாலை
ADDED : டிச 15, 2025 05:03 AM

திருவேற்காடு: திருவேற்காடு - பள்ளிக்குப்பம் சாலையில், வழிநெடுக முகம் சுளிக்க வைக்கும் வகையில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. டன் கணக்கில் குப்பை தேங்கி உள்ளதால், கடும் சுகாதார சீர்கேடுடன் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
திருவேற்காடு அடுத்த சென்னீர்குப்பம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இங்குள்ள இரண்டாவது வார்டு பள்ளிக்குப்பத்தில் எம்.ஆர்.நகர், மாரியம்மன் கோவில் தெரு, நேதாஜி தெரு, அப்துல் கலாம் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகள், பிரதான சாலையில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் உள்ளன.
திருவேற்காடு - பள்ளிக்குப்பம் சாலை 1.4 கி.மீ., துாரம் உடையது. சென்னீர்குப்பம், திருவேற்காடு, மதுரவாயல், பூந்தமல்லிக்கு தினமும் செல்லும் 1,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், பள்ளிக்குப்பம் சாலையில் சென்று வருகின்றன.
ஏற்கனவே, நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, 30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலை, கடந்தாண்டு புதிதாக போடப்பட்டது.
இந்நிலையில், அப்துல் கலாம் நகர் அருகே பள்ளிக்குப்பம் பிரதான சாலையோரம், பல மாதங்களாக, 100 மீ., துாரத்திற்கு டன் கணக்கில் குப்பை கழிவுகள் தேங்கி உள்ளன.
தொடர்ந்து உணவு கழிவுகள் கொட்டுவதால் பன்றிகள், கால்நடைகள் தொல்லை அதிகரித்து வருவதோடு, துர்நாற்றத்தால் கடும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு, சென்னீர்குப்பம் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவிர, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் மூக்கை பிடித்தபடி, இப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
இது, பள்ளிக்குப்பம் சாலை இல்லை; 'பள்ளி குப்பை' சாலை என பெயர் மாற்றம் செய்யலாம் என, சிறு குழந்தைகள் முதல் கிண்டல் அடிக்க துவங்கியுள்ளனர்.
எனவே, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தலையிட்டு, குப்பை கழிவுகளை அகற்றவும், விதிமீறி குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோரிக்கை வலுத்துள்ளது.

