/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஸ்கிராப்' கடையில் இருந்து மீட்கப்பட்ட போர் முறைகள் குறித்த ஓலைச்சுவடிகள்
/
'ஸ்கிராப்' கடையில் இருந்து மீட்கப்பட்ட போர் முறைகள் குறித்த ஓலைச்சுவடிகள்
'ஸ்கிராப்' கடையில் இருந்து மீட்கப்பட்ட போர் முறைகள் குறித்த ஓலைச்சுவடிகள்
'ஸ்கிராப்' கடையில் இருந்து மீட்கப்பட்ட போர் முறைகள் குறித்த ஓலைச்சுவடிகள்
ADDED : ஆக 11, 2025 01:40 AM

சென்னை:தமிழ்நாடு அரசு மாதிரி பள்ளிகள் சார்பில், தேசிய சிலம்ப தினத்தையொட்டி, 'ஆயக்கலைகளை மீட்டெடுப்போம்' எனும் தலைப்பில் சிலம்பம் கண்காட்சி, எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடந்தது.
தமிழகத்தில் உள்ள 39 அரசு மாதிரிப் பள்ளிகளில், பயிற்றுநர் வாயிலாக வாரம் மூன்று நாட்கள், கலைப் பயிற்சி வழங்கப்படுகிறது. சிலம்பம் பயிலும் மாணவர்களும், கலைப்பயிற்றுனர்களும் இணைந்து கண்காட்சி மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கினர்.
இங்கு, தமிழகம் முழுதும் 75 சிலம்ப ஆசான்களின் ஒத்துழைப்புடன் அவர்களிடம் இருந்து, அரிய மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாழ்ந்த 50 வகை சிலம்ப ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
போர்சிலம்பம், அலங்கார சிலம்பம், விளையாட்டு, உடற்கட்டு, தொல்பொருள் என்ற ஐந்து பிரிவுகளின் கீழ் ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிலம்பம் குறித்த ஓலைச்சுவடிகள் இடம்பெற்று உள்ளன.
இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:
இந்தாண்டு முதல், தேசிய அளவில் சிலம்பப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்கள், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். தமிழர் பாரம்பரிய கலையை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, அதற்கான உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்வதே இக்கண்காட்சியின் நோக்கம்.
கண்காட்சியில், போர்முறை மற்றும் மருத்துவம் குறித்த 200 பழமையான ஓலைச்சுவடிகள் இடம் பெற்றுள்ளன. இவை எந்த நுாற்றாண்டை சேர்ந்தவை என, கண்டுபிடிக்கவில்லை. யாரோ ஒருவர் அவற்றை 'ஸ்கிராப்'பில் பழைய பேப்பருக்கு போட்டுள்ளனர். அவற்றை மீட்டு இங்கு வைத்துள்ளோம். சிதிலமடைந்து உள்ள அவற்றை ஆவணப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வர்மகுச்சி, வஜ்ரகுச்சி என்பவை சிறிய அளவில் இருக்கும். இவை மறைக் கருவிகள். மறைத்து வைத்து தாக்க உதவும். இவற்றை பயன்படுத்தி, வர்ம புள்ளிகளில் அடித்தால் எதிரியை எளிதில் வீழ்த்தலாம். - ரா.நரேஷ் உத்தன், பிளஸ் 1, அரசு மாதிரிப் பள்ளி, கடலுார்.
கதாயுதம், மன்னர்கள் போர் முறையில் பயன்படுத்தியது. இதை பயன்படுத்தி, 100 பேர் இருந்தாலும், தனி ஒருவராக சண்டை போடலாம். அனுமன், பீமன் பயன்படுத்திய ஆயுதங்கள். இவை கருங்காலி, அரசமரத்தில் செய்யப்படும். - பூ.ஹர்சினி, பிளஸ் 1, அரசு மாதிரிப் பள்ளி, வேலுார்.
கேடயம் என்பது, போர்க்களத்தில் உடலைப் பாதுகாக்க பயன்படுத்தும் ஒரு கவசம். இது எதிரிகளின் ஆயுதங்களால் ஏற்படும் தாக்குதல்களைத் தடுக்கிறது. வாள், வெட்டுவதற்கும் குத்துவதற்கும் பயன்படுகிற ஒரு கூரிய ஆயுதம். ஒரு கையில் கேடயம், மறு கையில் வாள் பிடித்து சண்டையிடுவர். - ச.ஸ்ரீதேவதர்ஷினி, 10ம் வகுப்பு, அரசு மாதிரிப் பள்ளி, விருதுநகர்.