/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்த்தசாரதி பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
/
பார்த்தசாரதி பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஏப் 19, 2025 11:49 PM

சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
பிரம்மோத்சவத்தின் பிரதான நாளான நேற்று, தேர்த்திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, உற்சவர் பார்த்தசாரதி பெருமாளுக்கு அதிகாலையில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து, சர்வ அலங்காரம் நடத்தப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் பார்த்தசாரதி பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 7:00 மணிக்கு, 'கோவிந்தா...' கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் தேரை வடம்பிடித்தனர்.
வேத அத்யாபக கோஷ்டியினர் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடி முன்செல்ல, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் மாடவீதிகளை தேரில் வலம் வந்த பார்த்தசாரதி பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு தோட்டத் திருமஞ்சனம் நடந்தது.
இன்று வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரமும், குதிரை வாகன புறப்பாடும் நடக்கிறது. நாளை காலை தீர்த்தவாரி உற்சவமும், இரவு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.