ADDED : ஜூலை 11, 2025 12:20 AM

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான நேற்று, தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா நாமத்துடன் வடம் பிடித்தனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலின் இந்த ஆண்டிற்கான நரசிம்ம பிரம்மோத்சவம், கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரதான நாளான நேற்று, தேர்த்திருவிழா நடந்தது. காலை 6:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் தேரில் உற்சவர் எழுந்தருளினார்.
காலை 7:10 மணிக்கு, கோவிந்தா நாமத்துடன் தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் மாடவீதிகளை வலம் வந்த உற்சவர் தெள்ளிய சிங்கர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 8:15 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.
லட்சுமி நரசிம்மர் கோவில்
ராமாபுரத்தில் அமிர்தவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன் பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்ம வர்மனால் நிர்மாணிக்கப்பட்ட இந்த கோவிலில் 31ம் ஆண்டு ஆனி பிரம்மோத்சவ விழா கடந்த 3ல் துவங்கி 14ம் தேதி வரை நடக்கவுள்ளது.
நேற்று காலை 9:00 மணிக்கு கடக லக்னத்தில் ரத பிரதிஷ்டை திருத்தேர் உத்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ரதத்தின் வடம் பிடித்து இழுத்து, 'கோவிந்தா கோவிந்தா' என கோஷமிட்டனர். மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.