ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 'மக்கர்' 12 மணி நேரம் திணறிப்போன பயணியர்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 'மக்கர்' 12 மணி நேரம் திணறிப்போன பயணியர்
ADDED : மே 24, 2026 03:24 AM
சென்னை: இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், சென்னையில் இருந்து கொல்கட்டா புறப்பட்ட விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. பயணியர், 12 மணி நேரத்திற்கும் மேலாக தவித்தனர்.
சென்னையில் இருந்து கொல்கட்டா செல்லும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானம் நேற்று முன்தினம் இரவு 7:40 மணிக்கு புறப்பட தயாரானது. இதில் 180 பயணியர் இருந்தனர்.
விமானம் குறித்த நேரத்தில் புறப்படாமல், இரவு 10:10 மணிக்கு புறப்படும் என, முதலில் அறவிக்கப்பட்டது. அதன்படி, விமானம் ஓடுபாதையில் ஓடிக்கொண்டு இருந்தபோது, திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதனால், விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த விமான பொறியாளர்கள் குழு, விமானத்துக்குள் ஏறி கோளாறு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
விமானம் இரவு 11:30 மணிக்கு புறப்படும் என, மீண்டும் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறை விமானத்தை இயக்க முயன்ற போதும், இயந்திரத்தில் கோளாறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடுப்பான பயணியர், விமான நிறுவன ஊழியர்களை வார்த்தைகளால் வாட்டி வதைக்க துவங்கினர். சிலர் சத்தமிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து, விமானத்தில் இருந்து பயணியர் கீழே இறக்கப்பட்டு, ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். சிலர் அவசரமாக பயணம் செய்ய வேண்டும் எனக்கூறி, பயணத்தை ரத்து செய்து, வேறு நிறுவன விமானத்தில் பயணித்தனர். நேற்று காலை 8:00 மணிவரை விமான பழுதை சரி செய்ய முடியவில்லை.
ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
புறப்படும் முன் கண்டறியப்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை- - கொல்கட்டா விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணியரை ஏற்றிச்செல்ல மாற்று விமானத்திற்கு ஏற்பாடு செய்தோம்.
இடைப்பட்ட நேரத்தில், பயணியர் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். கூடுதல் கட்டணமின்றி, மாற்றுத்தேதி முன்பதிவு அல்லது முழு தொகையையும் திரும்பப்பெறும் வசதியும் வழங்கப்பட்டது; சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சூறைக்காற்றால்
விமான சேவை பாதிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை திடீரென பலத்த சூறைக்காற்றுடன், மோசமான வானிலை நிலவியது. இதனால், ஹைதராபாத்தில் இருந்து 82 பயணியருடன், சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல், திருப்பதிக்கு திருப்பி விடப்பட்டது.
அபுதாபி, துபாய் ஆகிய சர்வதேச நகரங்களில் இருந்து, சென்னை வந்த விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. காற்றின் வேகம் குறைந்த பின், விமானங்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டன.
சென்னையில் இருந்து கொல்கட்டா, டில்லி, வாரணாசி, பெங்களூர், கோவை, மதுரை ஆகிய உள்நாட்டு விமானங்கள், மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
