/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.டி.சி.,யில் செயல்படாத 'சிங்கார அட்டை' சர்வர் பிரச்னையால் பயணியர் அவதி
/
எம்.டி.சி.,யில் செயல்படாத 'சிங்கார அட்டை' சர்வர் பிரச்னையால் பயணியர் அவதி
எம்.டி.சி.,யில் செயல்படாத 'சிங்கார அட்டை' சர்வர் பிரச்னையால் பயணியர் அவதி
எம்.டி.சி.,யில் செயல்படாத 'சிங்கார அட்டை' சர்வர் பிரச்னையால் பயணியர் அவதி
ADDED : ஆக 20, 2025 12:22 AM

சென்னை, மாநகர பேருந்துகளில் பயன்பாட்டில் உள்ள தானியங்கி டிக்கெட் கருவியில், சர்வர் பிரச்னையால், 'சிங்கார சென்னை அட்டை'யை பயன்படுத்த முடியாமல் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
மெட்ரோ ரயிலில் பயணிக்க வசதியாக, 'சிங்கார சென்னை அட்டை' 2023ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அட்டையை மாநகர போக்குவரத்து கழகமான எம்.டி.சி., பேருந்துகளிலும் பயன்படுத்தும் நடைமுறை, கடந்த ஜன.,6ல் அமலுக்கு வந்தது.
மெட்ரோ, மாநகர பேருந்துகளிலும் பயன்படுத்தும் வசதி வந்துள்ளதால், தினமும் பல ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சமீப காலமாக மாநகர பேருந்துகளில் இந்த அட்டையை பயன்படுத்தும்போது, அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்படுகிறது.
மாநகர பேருந்து பயணியர் சிலர் கூறியதாவது:
சிங்கார சென்னை அட்டைக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரே அட்டையில் பேருந்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க வசதியாக உள்ளது .
சில்லரை பிரச்னை மற்றும் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், மாநகர பேருந்தில் இந்த அட்டையை பயன்படுத்தும்போது, அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக, நடத்துநர்கள் கூறுகின்றனர்.
சில நேரங்களில் அட்டையை காண்பித்து, டிக்கெட்டை உறுதி செய்ய தாமதம் ஏற்படுகிறது. அட்டையை நம்பி, கையில் பணமின்றி சென்றவர்கள், நடத்துநர்களால் இறக்கி விடப்படுகின்றனர்.
எனவே, பயணியருக்கு பயனுள்ள இந்த திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய, மாநகர போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'சிங்கார சென்னை அட்டையில் பயணியர் தடையின்றி டிக்கெட் பெற்று வருகின்றனர். இந்த புகார் குறித்து, ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.